Published : 22 Apr 2022 05:39 PM
Last Updated : 22 Apr 2022 05:39 PM
புதுச்சேரி: "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புதுவை வருகை, பாஜகவின் ஆட்சியாக மாற்ற ஒரு முயற்சியாக இருக்கலாம்" என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி சுப்பிரமணியன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரிக்கு நாளை மறுநாள் வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக, புதுச்சேரி மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் நடத்துகின்ற கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்கு வருகை புரிவதால் புதுச்சேரியை ஆளும் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியில் குழப்பம் ஏற்படலாம் என்கிற சந்தேகம் மக்கள் மத்தியல் எழுகின்றது. ஆரோவில் நிகழ்ச்சி, அரவிந்தர் ஆசிரம நிகழ்ச்சி மற்றும் சில அரசு, தனியார், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகிறார் என்று சொன்னாலும் கூட உண்மையில் இவர் வருவது ஏதாவது ஒரு பெரிய அரசியல் மாற்றத்திற்காகத் தான் இருக்கும் என்பது மக்களின் சந்தேகம்.
கொல்லைப்புறமாக என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியை முழுமையாக பாஜகவின் ஆட்சியாக மாற்ற ஒரு முயற்சியாக இருக்கலாம் அமித் ஷாவின் வருகை. ஆனால் அமித் ஷாவின் வருகை, புதுச்சேரி மாநிலத்தில் நிலவும் நிதி பற்றாக்குறையைப் போக்குவதற்கோ, கடன் சுமையைக் குறைப்பதற்கோ அல்லது வேலை வாய்ப்பை உருவாக்கக் கூடிய புதிய தொழிற்சாலைகளை கொண்டுவருவதற்கோ இருக்காது என்பது உறுதி.
ஏனென்றால், முன்பு தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர் வந்திருந்தபோது சில சட்டப்பேரவை உறுப்பினர்களையும், சில முக்கியஸ்தர்களையும் தனது கட்சியில் சேர்த்தார். அதுபோல், இப்போதும் பிற கட்சி எம்எல்ஏக்கள், சுயேட்சை எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்த்து புதுச்சேரியில் தங்களது, பாஜகவின் ஆட்சியாக மாற்றுவதற்காக புதுச்சேரி வருகிறார் என்றுதான் மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.
சுதந்திரம் அடைந்ததிலிருந்து கடந்த 2014 வரையிலான 67 ஆண்டு கால ஆட்சிகளில் இந்திய அரசு வாங்கிய கடன் ரூ.50 லட்சம் கோடி. அதன் பிறகு ஏற்பட்ட நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்காலம் ஆகிய கடந்த 8 ஆண்டுகளில் வாங்கியுள்ளது மட்டும் ரூ.100 லட்சம் கோடிக்கு மேல் ஆகும். நரேந்திர மோடியும், பாஜகவும், இந்திய அரசுக்கு வரவேண்டிய வருமானங்களை எல்லாம் தங்களுக்கு வேண்டிய குஜராத் கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கிடைக்கச் செய்துவிட்டு இந்திய நாட்டினை பெரிய கடனாளியாக ஆக்கியிருக்கிறார்கள்.
இம்மாதிரியாக, இந்திய நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துப் பெரிய கடனாளி நாடாக இந்தியாவை மாற்றியிருப்பதால், இதைப்போல் அதிக கடன் பெற்று அதன் காரணமாக மோசமான பொருளாதார நெருக்கடி நிலையில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் நிலைக்கு இந்தியாவை தள்ளிவிட்டு விடுவார்களோ, அல்லது ஏற்கெனவே அந்நிலைக்குத் தள்ளி விட்டார்களோ என்கிற அச்சமே தற்போது பொதுமக்கள் மத்தியில் நிலவுகின்றது" என்று சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT