Published : 22 Apr 2022 03:17 PM
Last Updated : 22 Apr 2022 03:17 PM
விழுப்புரம்: மரக்காணத்தில் 2013-ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், அரசு தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் இன்று விடுதலை செய்து திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதியன்று வன்னியர் சங்கத்தின் இளைஞர் பெருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து வன்னியர் சமூகத்தினர், பாமகவைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மகாபலிபுரத்திற்கு பல்வேறு வாகனங்களில் சென்றனர்.
அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மரக்காணம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக மகாபலிபுரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது மரக்காணம் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இளைஞர் சங்க மாநாட்டிற்கு சென்ற பாமக தொண்டர்களுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இது, அடிதடி மற்றும் கலவரமாக மாறியது.
இதனால், மரக்காணம் அருகே புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில், சாலையில் நின்றிருந்த அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசு பேருந்துகள் உட்பட சில வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இது குறித்து மரக்காணம் போலீஸார் 200 பாமகவினர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து 200 பேரில் 20 நபர்களின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இந்த வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண் 2 நீதிபதி சுதா முன்பு நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் நீதிபதி சுதா இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் அரசு தரப்பில் போதுமான சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக தெரிவித்தார். பாமக தரப்பில் வழக்கறிஞர் பாலாஜி ஆஜரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT