Published : 22 Apr 2022 02:03 PM
Last Updated : 22 Apr 2022 02:03 PM
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீஸார் இரண்டாவது நாளாக இன்றும் (ஏப்.22) விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற பின்னர், கோடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவின் கண்காணிப்பு பணியை யாரிடம் கொடுத்தீர்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை போலீஸார் எழுப்பியதாகத் தெரிகிறது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீஸார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை ஐ.ஜி. சுதாகர் தலைமையில் நீலகிரி எஸ்.பி ஆசிஸ்ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சந்திரசேகரன், பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் என8 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் இன்று காலை 10 மணிக்கு சென்னை தியாகராயநகரில் உள்ள சசிகலா வீட்டுக்குச் சென்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர்.
அப்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின்னர், கோடநாடு எஸ்டேட்டில் உள்ள பங்களாவின் கண்காணிப்புப் பணியை யாரிடம் கொடுத்தீர்கள்?, எஸ்டேட்டின் சிசிடிவி கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த தினேஷ்குமார் தற்கொலை செய்வதற்கு முன்னர் உங்களிடமோ, உங்களது உறவினரிடமோ பேசினாரா?, சிசிடிவி காட்சிகளை எத்தனை நாட்களாக தினேஷ்குமார் ஆய்வு செய்து வந்தார்?, கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், சிசிடிவி கேமராக்கள் செயல்படாதது குறித்து முன்கூட்டியே தெரியுமா? கொலை, கொள்ளைச் சம்பவம் குறித்து எஸ்டேட் மேலாளர் நடராஜன் முதலில் யாரிடம் தகவல் தெரிவத்தார்?, எப்போதும் மின்தடை ஏற்படாத பகுதியான கோடநாடு எஸ்டேட் பகுதியில் கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்தபோது ஏற்பட்ட மின்தடை குறித்து யாரிடமாவது கேட்டீர்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்பட்டன.
இதுதொடர்பாக சசிகலா அளித்த வாக்குமூலங்களைப் போலீஸார் வீடியோ பதிவு செய்தனர். நேற்று 6 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இரண்டாவது நாளாக இன்று மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment