Published : 22 Apr 2022 01:23 PM
Last Updated : 22 Apr 2022 01:23 PM
சென்னை: "மே மாதத்தில் கிடைக்கக்கூடிய ஆயிரம் மெகாவாட் காற்றாலை மின்சாரம் இப்போதே கிடைக்கிறது. ஆனாலும் மின்வெட்டு ஏற்படுகிறது என்றால், நிர்வாக கோளாறு, நிர்வாகத் திறமையற்ற அரசு செயல்படுவதே இதற்கு காரணம்" என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மின்வெட்டு தொடர்பாக அதிமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு துறையின் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்தார். ஆனால் அமைச்சரின் விளக்கத்தாஇ ஏற்க மறுத்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தமிழகத்தில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அரசின் கவனத்துக்கு நாங்கள் கொண்டு வந்தோம். தமிழகத்தில் 16,500 மெகா வாட்டிலிருந்து, 17,100 மெகா வாட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் தமிழகத்தினுடைய மின் உற்பத்தி, 12,800 மெகாவாட்டிலிருந்து, 13,100 மெகாவாட்டாகத்தான் இருக்கிறது. இதற்குக் காரணம் தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழக அரசு முறையாக நிலக்கரியை கொள்முதல் செய்யாத காரணத்தினாலும், மத்திய தொகுப்பிலிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய நிலக்கரியை பெறாத காரணத்தினாலும் அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி இல்லாத காரணத்தாலும் அனல்மின் நிலையங்கள் முழுமையாக செயல்படவில்லை.
இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின்தடை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு அரசினுடைய தவறான முடிவுகள்தான் முழுக் காரணம். கோடை காலத்தில் மின்சாரத்தின் தேவையும் அதிகரிக்கும். அதிமுக ஆட்சியில் கோடை காலத்தில் அனல்மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை முறையாக மத்திய அரசிடமிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கொள்முதல் செய்து இருப்பு வைத்திருப்போம். கோடை காலத்தில் தடையின்றி அனல்மின் நிலையங்கள் செயல்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு, மக்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கினோம்.
அதிமுக ஆட்சியில் கோடைகாலத்தில் 17,120 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. அதை முழுமையாக நாங்கள் தடையின்றி கொடுத்தோம். அதனால் மின்வெட்டு இல்லாத ஒரு மாநிலமாக தமிழகம் இருந்தது. 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு நிலவியது. அன்றைய தினம் நிர்வாக திறமையில்லாத ஓர் அரசு ஆட்சி செய்த காரணத்தால், மக்களுக்கு முழுமையாக மின்சாரம் வழங்கப்படவில்லை. தொடர் மின்வெட்டு இருந்தது, இதனால் தமிழகத்துக்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் அனைத்தும் வேறு மாநிலங்களுக்குச் சென்றன. பொருளாதாரமும் பின்தங்கியது. ஒரு நாட்டினுடைய வளர்ச்சி, மின் உற்பத்தியைப் பொருத்துதான் இருக்கிறது.
ஆனால் இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலங்களிலும் திமுக ஆட்சியில் இதே நிலைதான். 2011-ம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா தமிழகத்தை 3 ஆண்டுகளில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றுவேன் என்று கூறினார். அதுபோல அவரது கடுமையான முயற்சியால் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியது. அவரது மறைவுக்குப் பின்னரும் தடையில்லா மின்சாரம் வழங்கினோம். மின்வெட்டு இல்லாத மாநிலமாக உருவாக்கிக் கொடுத்தோம், அதனால் புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வந்தன.
மாணவர்களின் தேர்வுக் காலம் என்பதால் மின்வெட்டால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நகரங்களில் இரவு நேர மின்வெட்டால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அதிமுக ஆட்சியில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தமிழகம் வரை 6 ஆயிரம் மெகாவாட் மின்பாதை அமைக்கப்பட்டது. இதன்மூலம் 4 ஆயிரம் மெகாவாட் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிமுக ஆட்சியின் இறுதிக் காலத்தில் இந்த மின்பாதை அமைக்கப்பட்டது. மின்தடை வருகின்றது எனத் தெரிந்துவுடனேயே அரசு வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்து வழங்கியிருக்கலாம். ஆனால், அரசு அதைச் செய்யத் தவறிவிட்டது.
மே மாதம்தான் காற்றாலை மின்சாரம் கிடைக்கும். ஆனால் இப்போதே ஆயிரம் மெகாவாட் காற்றாலை மின்சாரம் கிடைக்கிறது. அப்படியிருந்தும் மின்வெட்டு ஏற்படுகிறது என்றால், நிர்வாகக் கோளாறு, நிர்வாகத் திறமையற்ற அரசு செயல்படுவதே காரணம்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT