Published : 21 Apr 2022 09:37 PM
Last Updated : 21 Apr 2022 09:37 PM
சென்னை: கடந்த மே 2021 முதல் மார்ச் 2022 வரையிலான 10 மாதங்களில் “பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் 4,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் இன்று மாற்றுத்திறனாளிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர் கீதா ஜீவன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது போக்சோ சட்டம் தொடர்பாக அவர் வெளியிட்ட தகவல்கள்:
> தமிழக முதல்வர் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக நடத்தும் ஒவ்வொரு ஆய்வுக் கூட்டத்திலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை கூராய்வு செய்கிறார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
> 2021 முதல் மார்ச் 2022 வரை தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்து, சுமார் 45,000 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
> பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக தொலைதூர இடங்களுக்கு சென்று விசாரணை செய்வதற்காக நடமாடும் காவல் வாகனம் மூலம் விசாரணை பதிவு செய்யப்பட்டு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
> கடந்த மே 2021 முதல் மார்ச் 2022 வரையிலான 10 மாதங்களில் “பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) 2012–ன் கீழ் 4,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 36 வழக்குகளில் நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், நிலுவையில் இருந்த 1,082 வழக்குகளில் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
> முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்சோ சட்டம் 2012-ன் கீழ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக "தமிழ்நாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டு நிதியம்" ஒன்றை ஏற்படுத்தி, அந்த நிதியத்திற்கு இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு கூட இந்த நிதியத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படவில்லை என்பதே உண்மை. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், போக்சோ சட்டம் 2012-ன் கீழ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு கூடுதலாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 2012-லிருந்து நிலுவையிலிருந்த வழக்குகளில், 373 குழந்தைகளுக்கு ஏறக்குறைய 7 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT