Published : 21 Apr 2022 07:06 PM
Last Updated : 21 Apr 2022 07:06 PM
சென்னை: 2,100 அரசுப் பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.112.83 கோடி மதிப்பீட்டில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உறுதுணையான சேவைகள் அனைத்தையும் ஓரிடத்தில் வழங்கிட 10 மாநகராட்சிகளில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைத்தல், ரத்த சோகையை தடுக்க 19 மாவட்டங்களில் தீவிர விழிப்புணர்வு இயக்கத்தை நடத்துதல், எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணித்திட மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சிக் கண்காணிப்பு கருவிகள் வழங்குதல், மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகள் பெற்று பராமரிக்கும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார். அவர் வெளியிட்ட 14 முக்கிய அறிவிப்புகள்:
> 112.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,100 அரசுப் பள்ளி சத்துணவு மையங்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டப்படும்.
> மூத்த குடிமக்கள் நலனுக்காக சமூக நல இயக்ககத்தில் தனி அலகு ஒன்று உருவாக்கப்படும்.
> சமூக நலன், சமூக பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் திட்ட மேலாண்மை அலகு ஒன்று ஏற்படுத்தப்படும்.
> மூத்தக் குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த வளாகம் கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான சாத்தியக்கூறாய்வு மேற்கொள்ளப்படும்.
> வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உறுதுணையான சேவைகள் அனைத்தையும் ஓரிடத்தில் வழங்கிட பத்து மாநகராட்சிகளில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்படும்.
> தமிழகத்தில் பாலினம் குறித்த நிதி நிலை அறிக்கையை உறுதி செய்வதற்காக அனைத்துத் துறைகளிலும் பாலின வரவு செலவு திட்டம் உருவாக்கப்படும்.
> ரத்த சோகையை தடுக்க 19 மாவட்டங்களில் தன் சுத்தம், குடற்புழு நீக்கம், கை கழுவுதல் உள்ளிட்ட விரிவான தீவிர விழிப்புணர்வு இயக்கத்தை 4.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடத்தப்படும்.
> ஒருங்கிணைந்த குழுந்தை வளர்ச்சி திட்ட பணிகள் வழங்கும் சேவைகள் பயனாளிகளை சென்றடைவதை கண்காணிக்கும் பொருட்டு 1.50 கோடி ரூபாய் செலவினத்தில் கணினிமயமாக்கப்பட்ட பயனாளிகள் சேவை மையம் அமைக்கப்படும்.
> மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழுந்தை வளர்ச்சி திட்ட மையங்களில் குழந்தைகளின் முதல் 1,000 நாட்கள் குறித்த விழிப்புணர்வை 1.74 கோடி ரூபாய் செலவினத்தில் ஏற்படுத்தப்படும்.
> எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணித்திட 85 லட்சம் ரூபாய் செலவினத்தில் 1,000 எண்ணிக்கையிலான மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சிக் கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும்.
> செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லத்திற்கான புதிய கட்டடம் 15.95 கோடி ரூபாய் செலவினத்தில் கட்டப்படும்.
> சென்னை மாவட்டத்தில் கூடுதலாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஒன்றை 68.53 லட்சம் ரூபாய் செலவினத்தில் அமைக்கப்படும்.
> மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகள் பெற்று பராமரிக்கும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும்.
> தமிழகத்தில் குழந்தைகள் இல்லங்கள் அதிகளவில் உள்ள ஆறு மாவட்டங்களில், அவ்வில்லக் குழந்தைகள் பயன்பெறும் வகையில் வாழ்வியல் வழிகாட்டு மையங்கள் 48.24 லட்சம் ரூபாய் செலவினத்தில் அமைக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT