Published : 21 Apr 2022 06:05 PM
Last Updated : 21 Apr 2022 06:05 PM

'100 கேள்விகள்' - கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் முதல் நாளில் 6 மணி நேரம் விசாரணை

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக சென்னை தியாகராயநகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் 6 மணி நேரம் இன்று (ஏப்.21) விசாரணை நடத்திய தனிப்படை போலீஸார் நாளை (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணை நடத்தவுள்ளனர்.

தனிப்படை விசாரணை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக சென்னை தியாகராயநகரில் உள்ள சசிகலாவிடம் மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை இன்று விசாரணை நடத்தியது . இந்தத் தனிப்படையில் நீலகிரி எஸ்.பி. ஆஷிஷ் ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சந்திரசேகரன் மற்றும் பெண் போலீஸார் ஆகியோர் உடனிருந்தனர்.

6 மணி நேர விசாரணை: ஏற்கெனவே இந்த வழக்கில் தொடர்புடைய 217 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், சென்னை வந்த தனிப்படை போலீஸார், சசிகலாவின் வீட்டில் காலை 11 மணிக்கு விசாரணையைத் தொடங்கினர். பின்னர், மதிய உணவு இடைவேளைக்குப் பின் மீண்டும் விசாரணைத் தொடர்ந்து நடத்தப்பட்டது. சசிகலாவிடம் இன்று 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

100 கேள்விகள்: கோடநாடு எஸ்டேட்டில் காணாமல் போன நிலப்பத்திரங்கள் சென்னை ஹோட்டலில் கிடைத்தது எப்படி என்பது உள்ளிட்ட நூறு கேள்விகளை சசிகலாவிடம் கேட்க தனிப்படை போலீஸார் திட்டமிட்டிருந்தனர். குறிப்பாக, கொலை, கொள்ளைச் சம்பவம் குறித்து உங்களுக்கு முதலில் தகவல் தெரிவித்தது யார்? நடராஜன் தொடர்பான கேள்விகள் அதில் இடம்பெற்றிருந்தன.

விசாரணைக்கு ஒத்துழைப்பு: இந்த விசாரணையின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சசிகலா முழு ஒத்துழைப்பு வழங்கியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக அவர் அளித்த வாக்குமூலங்கள் அனைத்து வீடியோப் பதிவாகவும், எழுத்துபூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நாளை மீண்டும் விசாரணை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இன்று விசாரணை முடிந்த நிலையில், நாளை (ஏப்.22) தனிப்படை போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தவுள்ளனர். நாளை காலை 10 மணிக்கு இந்த விசாரணை நடைபெறவுள்ளது.

வழக்கு பின்னணி: முன்னதாக, நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்.24-ல் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ராய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை நீலகிரி மாவட்ட போலீஸார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கோடநாடு வழக்கு விவகாரம் தொடர்பான விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் நீலகிரி மாவட்ட போலீஸார் அடங்கிய தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டன.

இதற்கிடையே, கோடநாடு வழக்கு தொடர்பாக உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினரும், தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான விவேக் ஜெயராமன், கோவையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அவரது மகன், உறவினர் மகன், நேர்முக உதவியாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். மேலும், இவ்வழக்கில் முன்னரே கைது செய்யப்பட்ட நபர்களிடமும் விசாரணை நடத்தினர். இதுவரை கோடநாடு வழக்கு தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், கோடநாடு வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற சசிகலாவிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனர். கோடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர்களில் ஒருவர் சசிகலா என்பதால், எஸ்டேட் வளாகத்துக்குள் உள்ள பொருட்கள் குறித்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட சிலருக்கே தெரியும். எனவே, கோடநாடு எஸ்டேட் வளாகத்துக்குள் என்னென்ன பொருட்கள் இருந்தன? அதில் இருந்து கொள்ளை சம்பவத்துக்கு பிறகு காணாமல் போன பொருட்கள் என்னென்ன என்பன குறித்து சசிகலாவிடம் விசாரித்து தகவல்களைப் பெற போலீஸார் திட்டமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x