Published : 21 Apr 2022 05:42 PM
Last Updated : 21 Apr 2022 05:42 PM
திருப்பத்தூர்: மாதனூர் ஒன்றியத்தில் இயங்கி வரும் பள்ளியில் ரெக்கார்டு நோட்டு கேட்ட ஆசிரியரை ஆபாசமாகப் பேசி தாக்க முயன்ற பள்ளி மாணவர் மற்றும் அவரது பாதுகாவலரிடம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினர். இதையடுத்து, ஆசிரியர்களுக்கு மாணவர்கள் உரிய மரியாதை தர வேண்டும் என அவர் கவுன்சலிங் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றி வருகின்றனர். இப்பள்ளியில், தாவிரவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சஞ்சய்காந்தி. இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 12-ம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்ற சஞ்சய்காந்தி அங்கு மாணவர்களிடம் ரெக்கார்டு நோட்டு கேட்டுள்ளார். முன் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவர்கள் ஒவ்வொருவராக சென்று தங்களது ரெக்கார்டு நோட்டுகளை அவரது மேஜை மீது வைத்தனர்.
அப்போது, கடைசி பென்சில் மேல் சட்டை இல்லாமல் படுத்திருந்த உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தனது ரெக்கார்டு நோட்டை எடுத்து வரவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து ஆசிரியர் சஞ்சய்காந்தி விளக்கம் கேட்டபோது, ஆவேசமடைந்த அந்த மாணவர் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் ஆபாசமாகப் பேசி, ஆசிரியரைத் தாக்குவதற்குப் பாய்ந்தார். இந்தச் சம்பவத்தை அங்குள்ள மாணவர் ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்தார். மாணவர் தாக்க வந்ததைக் கண்ட ஆசிரியர் சஞ்சய் காந்தி திடுக்கிட்டு செய்வதறியாமல் திகைத்து நின்று சற்று நேரத்தில் தன் இருக்கையில் அமர்ந்தார். இந்த வீடியோ சமூக வளைதளங்களில் நேற்று வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் வகுப்பறையில் ஆசிரியரிடம் அநாகரிகமாக நடந்துக் கொண்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களது ஆதங்கத்தை பதிவிட்டனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உத்தரவு பேரில், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி பள்ளிக்கு நேரில் சென்று அங்கு தலைமை ஆசிரியர் வேலனிடம் விசாரணை நடத்தினார்.
பிறகு, சம்பந்தப்பட்ட மாணவர் மற்றும் அவரது பாதுகாவலர் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை வரவழைத்து விசாரணை நடத்தினார். இதையடுத்து, வகுப்பறையில் ஆசிரியரை மிரட்டிய மாணவர் எந்தவித நிபந்தனையும் இன்றி ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமையாசிரியரிடம் தெரிவித்தார். மேலும், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதன்பிறகு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டது. இது குறித்து ஆசிரியர்கள் தரப்பில் கூறும்போது, ”12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓரிரு நாளில் செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. தற்போது அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுத்தால், அவரது தேர்வு முடிவுகள் பாதிக்கப்படும். மேலும், அவரது எதிர்காலமும் கேள்வி குறியாகும் என்பதால் அவரை மன்னித்து, இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடாமல் இருக்க அவருக்கு தகுந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT