Published : 21 Apr 2022 02:08 PM
Last Updated : 21 Apr 2022 02:08 PM

தமிழகத்தில் 2021-ல் மட்டும் 2,816 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: அரசின் நடவடிக்கைகள் என்னென்ன?

சென்னை: தமிழகத்தில் மார்ச் 2022 வரை 17,557 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மாற்றுத்திறனாளிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர் கீதா ஜீவன் பதிலளித்தார். முன்னதாக, கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

மாற்றுத்திறனாளிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் குழந்தைத் திருமணங்களைத் தடுத்தல் மற்றும் குழந்தைத் திருமண தடை சட்டம் தொடர்பாக கூறியிருப்பவை:

> குழந்தை திருமண தடைச் சட்டமானது இந்திய அரசால் 2006-ம் ஆண்டில் இயற்றப்பட்டது.

> தமிழ்நாடு குழந்தை திருமண தடுப்பு விதிகள் 2009, மாநில அரசால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

> இச்சட்டம் ஆண்களுக்கு 21 வயது மற்றும் பெண்களுக்கு 18 வயது என்பதை திருமண வயதாக குறிப்பிடுகிறது.

> இச்சட்டத்தின்படி குழந்தை திருமணம் என்பது தானாக நடவடிக்கை எடுக்கத்தக்க மற்றும் பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும்.

> குழந்தைத் திருமணம் என்பது செல்லத்தக்கதல்ல மற்றும் ரத்து செய்யப்படக்கூடியது.

> குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு பராமரிப்பு மற்றும் இருப்பிடம் வழங்கிட சட்டத்தில் வழிவகை உள்ளது.

> குழந்தைத் திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை வழங்கலாம்.

> 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், குழந்தை திருமணத்தில் ஈடுபட்டால் அவருக்கு 2 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

> இச்சட்டத்தை வலுவாக செயல்படுத்திட மாவட்ட சமூகநல அலுவலர்களை சட்டத்தின் பிரிவு 17-ன் படி, குழந்தைத் திருமண தடுப்பு அலுவலர்களாக அரசு நியமித்துள்ளது.

> மார்ச் 2022 வரை, மாநிலத்தில் 17,557 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

> கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் 2,816 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x