Published : 21 Apr 2022 01:24 PM
Last Updated : 21 Apr 2022 01:24 PM
புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புதுச்சேரி வருகையின்போது கருப்புக்கொடி காட்ட உள்ளதாக இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. மேலும், இந்தப் போராட்டத்தில் பங்கேற்க கட்சித் தலைமையிடம் அனுமதி கேட்டுள்ளதாக திமுக தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி செயலர் ராஜாங்கம் மற்றும் விசிக தேவபொழிலன், சிபிஐஎம்எல் பாலசுப்பிரமணியன் மற்றும் மதிமுக, முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி மற்றும் திமுக நிர்வாகிகள் நேற்று ஆலோசித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி செயலர் ராஜாங்கம் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியது: "புதுச்சேரிக்கு வரும் 24-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், அனைத்து மாநிலங்களிலும் இந்தி கட்டாயம் இருக்க வேண்டும் என்று அமித் ஷா கூறியுள்ளார். கேபினட்டில் 70 சதவீதத்துக்கு மேல் கோப்புகள் பயன்பாட்டில் இந்தியை கொண்டு வந்துள்ளனர். உள்துறை அமைச்சகம் மூலம் இந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. புதுச்சேரியின் நிதி நெருக்கடி தீர்க்கப்படவில்லை. கடன் தள்ளுபடி செய்யவில்லை. நிதிக் குழுவிலும் சேர்க்கவில்லை. மாநில அந்தஸ்து கோரிக்கை செயல்பட முடியாது என்று நாடாளுமன்றத்திலேயே மறுத்துள்ளனர். இந்தி திணிப்புக்கு எதிராகவும், புதுச்சேரியை வஞ்சிப்பதாலும் அமித் ஷா வருகையின்போது கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்தப் போராட்டம் அமித் ஷா வருகையின்போது பாக்குமுடையான்பட்டில் நடக்கும். இப்போராட்டம் பற்றி புதுச்சேரி முழுக்க வரும் 22, 23-ம் தேதிகளில் பிரச்சாரம் செய்யவுள்ளோம்.
தற்போது காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ளனர். அவர்கள் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்பதாக குறிப்பிட்டனர். அதேபோல் திமுக-வினரும் கட்சித் தலைமையிடம் போராட்டத்தில் பங்கேற்க அனுமதி கேட்டுள்ளனர். அவர்களும் கண்டிப்பாக பங்கேற்பார்கள்" என்று குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT