Published : 21 Apr 2022 12:06 PM
Last Updated : 21 Apr 2022 12:06 PM
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சைக்கிளிங் செல்ல வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விருப்பம் தெரிவித்ததாக அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரைவில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை ஓப்பன் டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டை 4 மண்டலங்களாக பிரித்து, 4 மண்டலங்களிலும் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும். வட சென்னையில் குத்துச்சண்டை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது உள்ளிட்ட விளையாட்டுத் துறை தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த அறிவிப்புகளை பாராட்டி பேசிய காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வபெருந்தகை, "தமிழக முதல்வர் உடல் விலிமையிலும், உள்ள வலிமையிலும் மாநில மக்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளார். இங்கு நான் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன். எங்களின் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க தமிழகம் வந்தார். அப்போது நாங்கள் காரில் சென்று கொண்டிருந்தோம். முதல்வருடைய வயதைப் பற்றி பேசிக் கொண்டு வந்தார். முதல்வரின் வயதை அறிந்து, அதைத் தன்னால் நம்ப முடியவில்லை என்று கூறினார். அப்போது நான் முதல்வர் சைக்கிளிங் செல்கிறார் என்று தெவித்தேன். அதற்கு, அடுத்த முறை நான் வரும்போது அவருடன் சைக்கிளிங் செல்ல வேண்டும் என்று ராகுல் காந்தி என்னிடம் விருப்பம் தெரிவித்தார்" என்று கூறினார்.
கடந்த பிப்ரவரி மாதம், தமிழக முதல்வரின் `உங்களின் ஒருவன்` புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அப்போது பேசிய ராகுல் காந்தி, ஸ்டாலினின் வயது 69 என்பதை நம்ப முடியவில்லை என தனது தாயார் சோனியா காந்தி கூறியதாகவும் பின்னர் கூகுள் செய்து காட்டி அதை நிரூபித்ததாகவும் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT