Published : 21 Apr 2022 12:15 PM
Last Updated : 21 Apr 2022 12:15 PM
சென்னை: நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு ஏற்படக்கூடும் என்று நான் எச்சரித்திருந்தேன். நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு இனிவரும் காலங்களிலாவது மின்வெட்டைத் தவிர்க்க நடவடிக்கை வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று ஏற்பட்ட மின்வெட்டால் பொதுமக்கள் தாங்க முடியாத அவதிக்கு ஆளானார்கள். சில மாவட்டங்களில் சில மணி நேரமும், திருவாரூர் மாவட்டத்தின் சில இடங்களில் 6 மணி நேரம் வரையிலும் மின்வெட்டு நீடித்தது. இனி இப்படி நிகழக்கூடாது.
அறிவிக்கப்படாத மின்வெட்டால் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களால் படிக்க முடியவில்லை. விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் உழவர்கள் சிரமப்பட்டனர். இரவில் உறங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மத்தியத் தொகுப்பிலிருந்து 750 மெகாவாட் மின்சாரம் தடைபட்டது தான் மின்வெட்டுக்கு காரணம் என்று மின்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அது உண்மையாக இருக்கலாம். ஆனால், இத்தகைய எதிர்பாராத நிகழ்வுகளை சமாளித்து மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவது தான் மின்வாரியத்தின் பணியாகும்.
தமிழகம் மின்மிகை மாநிலமல்ல... தற்சார்பு மாநிலமும் அல்ல. தமிழகத்தின் மின் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு தனியாரிடமிருந்தும், மத்தியத் தொகுப்பிலிருந்தும் தான் வாங்கப்படுகிறது. அதில் தடை ஏற்பட்டால் சமாளிக்க மாற்றுத் திட்டம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு ஏற்படக்கூடும்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கடந்த 13ம் தேதி நான் எச்சரித்திருந்தேன். நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு இனிவரும் காலங்களிலாவது மின்வெட்டைத் தவிர்க்க நடவடிக்கை வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT