Published : 21 Apr 2022 11:01 AM
Last Updated : 21 Apr 2022 11:01 AM
சென்னை: தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 216 கோடி மரங்கள் இருக்கும் என்று காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்றது. பூவுலகின் நண்பர்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ,சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன்,வேல்முருகன், ஜவாஹிருல்லா, சிந்தனைச்செல்வன், பாலாஜி, டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர் ராஜன், காலநிலை மாற்றம் தொடர்பாக சமீபத்தில் வெளியான கால நிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்க குழுவின் (IPCC) அறிக்கை தொடர்பாக விளக்கிப் பேசினார். மேலும், காலநிலை மாற்றம் தொடர்பான சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய நீரியல் வல்லுனர் ஜனகராஜன், காலநிலை மாற்றம் காரணமாக ஈசிஆர் - ஓஎம்ஆர் இடையில் தீவுகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், "காலநிலை மாற்றம் அச்சுறுத்தலாக உள்ளது. பூடான் நாட்டில் 70 சதவீதம் நிலப்பரப்பு பசுமைப் பரப்பாக உள்ளது. இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள 3 திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அனைத்து இடங்களிலும் சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக பசுமைப் பரப்பளவை அதிகரிக்க அதிக அளவு மரங்கள் நட வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் 216 கோடி மரங்களுக்கும் மேலாக தமிழகத்தில் இருக்கும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT