Published : 20 Apr 2022 03:25 PM
Last Updated : 20 Apr 2022 03:25 PM

தமிழகத்தில் மட்டுமல்ல, கர்நாடகாவிலும் மறைமுக இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு இருக்கிறது: கி.வீரமணி

கி.வீரமணி | கோப்புப் படம்.

சென்னை: தமிழகத்தில் மட்டுமல்ல, கர்நாடகாவிலும் மறைமுக இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு இருக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திராவிடர் கழக நீட் எதிர்ப்பு பரப்புரைப் பயணம் 16 ஆம் நாள் பொதுக்கூட்டம் கரூரில் நேற்று (ஏப். 19) நடைபெற்றது. இதனை ஒடி கரூரில் தங்கியிருந்த தி.க. தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''நீட்தேர்வை தமிழகத்தின்மீது திணிப்பதால் மருத்துவக் கனவோடு உள்ள ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20-க்கும் மேறற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின்படி இது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். புதிய கல்விக்கொள்கையை படிப்புப் தடுப்பு கல்விசட்டம் எனலாம். புதிய கல்விக்கொள்கை என்பது ராஜாஜியின் பழைய குலக்கல்வி திட்டம்தான்.

தாய்மொழிக்கு முக்கியத்துவம் எனக்கூறி 3வது மொழியாக சமஸ்கிருதம், இந்தியை பரப்ப வேண்டும் என்பதுதான் திட்டம். இந்தியைப் படிக்க வைக்க இந்தியை மறைமுகமாக திணிக்கின்றனர். இந்தியை இணைப்பு மொழி என்கின்றனர். மறைமுகமாக சம்ஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நடவடிக்கையே இது. தமிழகம் மட்டும் இந்தியை எதிர்க்கவில்லை. கர்நாடகாவிலும் இந்திக்கு எதிர்ப்பு உள்ளது.

என்இபி என்பது நேஷனல் எஜுகேஷன்பாலிசி அல்ல 'நோ எஜுகேஷன் பாலிசியாகும்'. 3, 5, 8, 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என அறிவித்து விட்டு அதனை கணக்கில் கொள்ளாமல் நுழைவுத்தேர்வு வைத்து தேர்வு செய்வது பயிற்சிவகுப்பு மையங்களைத்தான் வளர்க்கும். நீட் மசோதாவை ஆளுநர் அனுப்பாமல் வைத்திருப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், சட்டப்பேரவை, மக்களை மதிக்கத் தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது.

மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டப்பட்டது. இதில் பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன. இதில் யாரோ ஒருவர் கொடியை தூக்கி வீசியது பெரிய விஷயமல்ல. எதிர்க்கட்சிகள் தான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அதிமுக இதனை விமரிசிப்பதை கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறிவதுப்போல தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.

சென்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோது திண்டிவனத்தில் நடந்த சம்பவத்தை அனைவரும் அறிவார்கள்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x