Published : 20 Apr 2022 01:09 PM
Last Updated : 20 Apr 2022 01:09 PM

'இந்தி மொழிக்கு அதிமுக பட்டுக் கம்பளம் விரித்த வரலாறு தெரியாதா?' - ஓபிஎஸ்ஸுக்கு தங்கம் தென்னரசு பதிலடி

அமைச்சர் தங்கம் தென்னரசு | கோப்புப் படம்.

சென்னை: தமிழன்னைக்கு 100 கோடி ரூபாய் செலவில் சிலை என்று கூறி, திட்டத்தையே கைவிட்டது அதிமுக ஆட்சிதான் என்று முன்னாள் முதல்வரும் அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்துக்கு தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து இன்று தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மொழிப் பிரச்சனையில் வழக்கம் போல அதிமுக மேற்கொள்ளும் இரட்டை வேடம் இப்போது வெட்ட வெளிச்சமாக மக்கள் மன்றத்தில் அம்பலப்பட்டு விட்டதும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், திமுகவின் மீது அவதூறுகளை அள்ளி வீசி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இந்தி மொழிக்கு அதிமுக பட்டுக் கம்பளம் விரித்த வரலாறுகளை எல்லாம் மூடி மறைக்க முயற்சித்திருக்கின்றார்.

தமிழக முதலமைச்சர் தலைமையிலான நல்லாட்சியில் தான் தமிழகத்தில் உள்ள 117 கோவில்களுக்கு குடமுழக்கு விழாக்கள் செவ்வனே நடைபெறவும்; ஏறத்தாழ ரூ.664 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திருக்கோவில்களுக்கு திருப்பணிகள் சிறப்பாக நடைபெறவும் ஆணைகள் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முதல்வரின் சீரிய வழிகாட்டுதலில் இந்து சமய அறநிலையத் துறை உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏறத்தாழ ரூ.2600 கோடி மதிப்பீட்டிலான திருக்கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டிருக்கின்றது. இந்த நற்செயலை நடுநிலை உணர்வு கொண்ட நல்ல உள்ளங்களும், நாளேடுகளும் நாளும் பாராட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் அனுதினமும் பார்க்கின்ற ஓ.பன்னீர் செல்வம் இப்போது 'திருக்கோவில்களைத் திமுக அரசு இடிக்கின்றது' என்ற பச்சைப் பொய்யை பரப்ப முற்பட்டு அறிக்கை வெளியிட்டு இருப்பது விரக்தியின் வெளிப்பாடாகும்.

தமிழ் வளர்ச்சித்துறை எனும் தனித்துமான துறையை உருவாக்கியதில் தொடங்கி, தனி அமைச்சகம் ஒன்றையும் தோற்றுவித்ததோடு மட்டுமல்லாமல் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போதெல்லாம் தமிழின் மாட்சிக்கும், மொழியின் பெருமைக்கும் திமுக ஆற்றி வரும் பணிகளும், சாதனைகளும் ஏட்டிலடங்காதவை ஆகும். முத்தமிழறிஞர் கலைஞரும், முதல்வரும் தமிழுக்கு ஆற்றிய தொண்டு என்பது சாதனைச் சரித்திரத்தின் ஒரு பகுதி என்பதை ஓ.பன்னீர் செல்வத்திற்கு நினைவூட்டுவது எனது கடமையாகும்.

சங்கம் வளர்த்த மதுரை மாநகரில், தமிழன்னைக்கு 100 கோடி ரூபாய் செலவில் சிலை அமைத்து சிறப்பு செய்யப்படும் என அறிவித்துவிட்டு, அதற்காக ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் இறுதியில் அந்த திட்டத்தையே கைவிட்டுவிட்டு தமிழன்னையை அவமதித்தது அதிமுக அரசு என்பதையும், அந்த அரசில் தான் பத்தாண்டு காலமாக நிதிநிலை அறிக்கையினை ஓ.பன்னீர் செல்வம் படித்து வந்திருக்கின்றார் என்பதனையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

பேரறிஞர் அண்ணாவால் அறிவிக்கப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞரால் உருவாக்கப்பட்டு, தமிழ் ஆராய்ச்சிக்கென்றே அமைக்கப்பட்டு உயர் அமைப்பான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலேயே இந்தி மொழி கற்றுத்தரப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்ட அதிமுக அரசில் தான் ஓ.பன்னீர் செல்வமும் அமைச்சராக இடம் பெற்றிருந்தார் என்பதை மறுக்க முடியுமா?

பரிதிமாற்கலைஞர் கண்ட கனவை நனவாக்கி முத்தமிழறிஞர் கலைஞரின் தளராத முயற்சியால் தமிழன்னையில் மகுடத்தில் ஒளி வீசும் மாணிக்கமாக வீற்றிருக்கும் செம்மொழி என்ற தகைமையை-அந்த சொல்லைக்கூட பத்தாண்டு கால தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்புகளில் இடம் பெறாது பார்த்துக்கொண்ட அதிமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சிக்கான சாதனைகள் என பட்டியல் போட முனைந்திருப்பதுதான் வேடிக்கையானது; வேதனையானதும் கூட.'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x