Published : 20 Apr 2022 10:06 AM
Last Updated : 20 Apr 2022 10:06 AM

'முகக்கவசம் கட்டாயமே; அபராதத்திலிருந்து தான் அரசு விலக்களித்துள்ளது' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமே. அதிலிருந்து அரசு விலக்களிக்கவில்லை. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற கெடுபிடியிலிருந்து மட்டுமே விலக்களிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டன. அவற்றிற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர், "டெல்லி, ஹரியாணா, மகாராஷ்டிரா மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதாகத் தகவல் வருகிறது. மக்கள் கரோனாவிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தொடர்ந்து பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். அரசு, முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற கெடுபிடியிலிருந்து மட்டுமே விலக்களித்துள்ளது. முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கரோனா வழிகாட்டு நெறிமுறையிலிருந்து விலக்களிக்கவில்லை. இதுவரை ஒரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தாதோர் தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேவைப்பட்டால் மாவட்டந்தோறும் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்படும்" என்றார்.

அதேபோல், "விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் சேவைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்காமல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததாக புகார் வந்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.

இதற்கிடையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் அன்றாடம் வெறும் 25 என்றளவில் இருந்து தொற்று கடந்த சில நாட்களாக 30 என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது என்றும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்றும் அவர் அந்த சுற்றறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

கரோனா ஒமிக்ரான் வைரஸின் XE திரிபால் சீனா, ஹாங்காங், பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக 1000க்கும் மேல் அன்றாட தொற்று பதிவாகிறது. இந்தியாவில் ஜூன் மாதம் அடுத்த கரோனா அலை பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறப்படும் நிலையில் மக்கள் முகக்கவசம் அணிவதை, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதைக் கைவிடக் கூடாது என மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x