Published : 20 Apr 2022 06:02 AM
Last Updated : 20 Apr 2022 06:02 AM
சென்னை: கிழக்கு கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரிவாக்கம் செய்வதற்கான தடையின்மை சான்று தமிழக அரசால் வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசும்போது, ‘‘சென்னை - கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.3 ஆயிரம் கோடி நிதியானது, தமிழக அரசு தடையின்மை சான்று வழங்காததால் திரும்பி சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது’’ என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
தற்போதைய கிழக்கு கடற்கரை சாலையானது முதலில் ஒரு வழிப்பாதையாக இருந்தது. இந்த கிழக்கு கடற்கரை சாலையை உருவாக்கியதே முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். புதுச்சேரி வரையுள்ள 135 கிமீ சாலையானது கடந்த 2002-ம் ஆண்டு டிட்கோ மற்றும் ஐஎல்எஃப் என்ற தனியார் நிறுவனத்தின் பங்களிப்பில் ரூ.60 கோடியில் மேம்படுத்தப்பட்டது.
அதன்பின் தனியார் நிறுவனம் விலகிய காரணத்தால், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம் (டிஎன்ஆர்டிசி) மூலம் ரூ.330 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டத்துக்கு ரூ.275 கோடி வங்கிக்கடன் பெறப்பட்டு, அக்கடனை அடைக்கும் வகையில் 2047-ம் ஆண்டு வரை புதுச்சேரி மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி மூலம் வசூல் செய்து கொள்ள முடிவெடுக்கப்பட்டு, அதன்படி செயல்படுத்தப்பட்டது.
இதற்கிடையே இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எடுத்துக் கொள்வதாக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. அதன்படி சாலை ஒப்படைக்கப்பட்டது. அதற்கு நாம் தடையின்மை சான்று கொடுக்க வேண்டும். அப்போது, ஏற்கெனவே வங்கிக்கடன் வாங்கியுள்ளோம். சுங்கச்சாவடி மூலம் அந்த கடனை அடைக்க வேண்டும்.இந்த நிலையில் சாலையை ஒப்படைத்தால், சுங்கச்சாவடி வசூலை யார் பெறுவது, கடனை யார் அடைப்பது என்பது குறித்து கடிதப் போக்குவரத்து நடைபெற்று வந்தது.
அப்போது, அவர்கள் அமைச்சரிடம் கேட்டு பதில் சொல்வதாக கூறி, அதன்பின் சாலையை நாங்களே எடுத்துக் கொள்கிறோம் என கூறி எடுத்துக் கொண்டனர்.
அதன்படி, மாமல்லபுரம் - முகையூர், முகையூர் - மரக்காணம், மரக்காணம் - புதுச்சேரி என 3 பகுதியாக பிரிக்கப்பட்டு நில எடுப்பு பணிகள் முடித்து ஒப்பந்தம் கோரப்பட்டது. மாமல்லபுரம் - முகையூர் பகுதிக்கு ரூ.707 கோடி மதிப்பிலும், முகையூர் - மரக்காணம் பகுதிக்கு ரூ.792 கோடிக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு முடிந்துள்ளது. மரக்காணம் - புதுச்சேரி பகுதிக்குத்தான் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாலையை உங்களிடம் ஒப்படைத்துள்ளதால், சுங்க வசூலை நாங்கள் செய்து கொள்கிறோம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம்.
அதற்கு அவர்கள் அந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் வரை நீ்ங்கள் வசூலித்துக்கொள்ளலாம் என வாய்மொழியாகக் கூறியுள்ளனர். முதல்வரிடம் இந்தத் தகவல்களை கூறியதும், மத்திய அரசின் பணம் வரும் நிலையில் இதற்கு ஒப்புதல் வழங்கலாம் என அவரும் கூறியதால், கடந்த 11-ம் தேதி தடையின்மை சான்று வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், பத்திரிகைகளில் தவறாக செய்தி வந்துள்ளது. தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT