Published : 20 Apr 2022 05:49 AM
Last Updated : 20 Apr 2022 05:49 AM

ஆளுநர் - முதல்வர் இடையோன மோதல் போக்கு மாநிலத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை கருத்து

தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்று 2 ஆண்டுகளும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்று ஓராண்டும் நிறைவுபெற்றதை முன்னிட்டு, அவரது பயணம் குறித்த நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நூலை வெளியிட, அவரது கணவர் சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார். படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை: ஆளுநர் - முதல்வர் இடையே மோதல் போக்கு இருந்தால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா ஆளுநராக 2 ஆண்டுகளும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக ஓராண்டும் தமிழிசை சவுந்தரராஜன் பணியாற்றியது குறித்த நூல் வெளியீட்டு விழா, சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. நூலை தமிழிசை வெளியிட, அவரது கணவர் சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில், தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:

நான் அதிகாரத்தை பயன்படுத்துவதாக ஒரு சிலர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். நான் அன்பை மட்டுமே பயன்படுத்துகிறேன். விமர்சனங்களை தூசிபோல் தட்டி விட்டு மக்கள் பணி செய்து வருகிறேன்.

தெலங்கானா முதல்வருடன் பணிபுரிவது சவாலாகத்தான் உள்ளது. ஆனால், ஆளுநராக எனது பணியை சரியாக செய்து வருகிறேன். தெலங்கானாவில் வலிமையான ஒருவரை ஆளுநராக நியமிக்க இருப்பதாக வதந்திகள் பரப்புகின்றனர். பெண் என்றால் வலிமை இல்லையா? பெண்ணாக எனக்கு இருக்கும் மகிமை வேறு யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை.

எங்கு சென்று பணியாற்றினாலும் நான் பிறந்த தமிழகத்துக்காக சேவை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய பிரதான ஆசை. கரோனா காலகட்டத்தில் தடுப்பூசி, உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்து ஆகியவை தேவைக்கு ஏற்ப கிடைக்க ஆளுநராக என் பணியை சரிவர செய்தேன்.

முதல்வரின் ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாக விமர்சனங்கள் வைக்கிறார்கள். ஆனால், என் பணி குறித்து புதுச்சேரி முதல்வர் பாராட்டு தெரிவிக்கிறார். அதேசமயம், தெலங்கானா முதல்வரோ என் பணிகள் மீதான விமர்சனங்களை அடுக்குகிறார்.

ஆளுநரும் முதல்வரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பதற்கு புதுச்சேரி ஒரு சிறந்த உதாரணம். அதேநேரம், ஆளுநருக்கும் முதல்வருக்குமான மோதல் போக்கால் மாநிலத்தின் வளர்ச்சி குறையும் என்பதற்கு தெலங்கானா மற்றொரு உதாரணம். நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது. ஜனநாயக வழியில் இருக்க வேண்டிய முதல்வர்கள், சில இடங்களில் சர்வாதிகாரியாக செயல்படுகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x