Published : 20 Apr 2022 05:13 AM
Last Updated : 20 Apr 2022 05:13 AM
சென்னை; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். தஞ்சாவூர் மற்றும் நீலகிரியில் ரூ.70 கோடியில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அதற்கு பதிலளித்து பேசியபோது அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
தொழில்துறை, ‘தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை’ என பெயர் மாற்றம் செய்யப்படும். அத்துடன் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல் ஆணையரகம் உருவாக்கப்படும். ஹைட்ரஜன் உற்பத்தி துறையில் (பசுமை மற்றும் நீல ஹைட்ரஜன்) பெரிய அளவில் முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஹைட்ரஜன் எரிசக்திக் கொள்கை வெளியிடப்படும்.
எண்ணெய் எரிபொருள் தேவையை குறைத்து சுற்றுச்சூழலின் தரத்தை மேம்படுத்தும் வகையில் எத்தனால் கொள்கை-2022 வெளியிடப்படும். தமிழ்நாடு தொழில் கொள்கை 2021-ன் கீழ் வழங்கப்படும் நிலையான ஊக்கச் சலுகைகளுடன் கூடுதலாக தொழில்நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு சிறப்பு திட்டம் வெளியிடப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை வட்டம் நாகமங்கலம் கிராமம், சூளகிரி வட்டம் அயனம்பள்ளி மற்றும் உத்தனப்பள்ளி கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். இதன்மூலம் சுமார் ரூ.21 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 16,800 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும். ஓசூர் மற்றும் தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காக்களில் தனியார் பங்களிப்புடன் ரூ.8 கோடி மதிப்பீட்டில் சரக்கு வாகன முனையங்கள் அமைக்கப்படும்.
ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவில் தனியார் பங்களிப்புடன் ரூ.7 கோடியில் வணிக வளாகம், உணவகம் அமைக்கப்படும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை தமிழகத்தின் 3-ம் நிலை நகரங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் தஞ்சாவூர் மற்றும் நீலகிரியில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே 250 ஏக்கர் பரப்பளவில் தனியார் பங்களிப்புடன் ரூ.500 கோடி செலவில் பல்துறை தொழிற்பூங்கா ஏற்படுத்தப்படும். இதன்மூலம் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம் நாகமங்கலம் கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் தொழிலக வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்படும்.
கோவையில் ரூ.500 கோடி செலவில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்கள் பொது வசதி மையமும், ரூ.300 கோடி மதிப்பீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவும் நிறுவப்படும். விமான போக்குவரத்து சேவை வளர்ச்சியை கருத்தில்கொண்டு தமிழகத்தில் விமானத்தை இயக்க பயிற்சி நிறுவனங்கள் அமைக்க டிட்கோ உதவும். இதன்மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான 3 சதவீத, 6 சதவீத வட்டி மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
முன்னதாக தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி, “முதல்வர் துபாய் பயணத்தை முடித்துவிட்டு திரும்பியபோது அதிமுக ஆட்சியில் தொழில்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித கப்பல்கள் என்று பேசியுள்ளார். அதுபோல பேசினால் மக்கள் உங்கள் கருத்தை நம்புவார்கள். அதனால் அவர்கள் மனம் எந்த நிலைக்கு மாறும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு பேசியதாவது: வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடத்தில் சொன்னதாக ஒன்றை இங்கே பதிவு செய்திருக்கிறார். நான் அப்படிச் சொல்லவில்லை. 10 ஆண்டுகளாக நடக்காததை 10 மாதங்களில் நாங்கள் நிறைவேற்றியுள்ளோம் என்ற அடிப்படையில்தான் சொன்னேனே தவிர வேறல்ல. தமிழகத்தில் தொழில்துறை வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து புதிய அன்னிய முதலீடுகளை பெறுவதற்காக, புதிய முதலீடுகளைப் பெறுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்ந்து போடப்பட்டு வருகின்றன. ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.69,375 கோடியே 54 லட்சம் முதலீட்டை ஈர்த்துள்ளோம்.
தொழில் வளர்ச்சியின் பயன், குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே சென்றடையாமல், தமிழகம் முழுமைக்கும் குறிப்பாக வளர்ச்சி குறைந்த மாவட்டங்களுக்கும் அது சென்றாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்நிய முதலீடுகளை ஈர்க்கக்கூடிய தமிழ்நாடு என்று ‘தி இந்து’ நாளேடு பாராட்டி எழுதியுள்ளது. மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனமே 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடுகள் 41.5 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. தேசிய அளவில் 16 சதவீத வீழ்ச்சியை சந்தித்த அதே காலகட்டத்தில், தமிழகம் இந்த வளர்ச்சியை பெற்றுள்ளது. இது பெருமைப்படத்தக்கது ஆகும்.
தமிழகத்தை முதலீட்டாளர்களின் முக்கிய மாநிலமாக மாற்றிக் காட்டியுள்ள தொழில்துறைக்கு, இத்துறைக்கு பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசு, அவருக்கு துணையாக இருக்கும் அதிகாரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். எனது தலைமையில் இயங்கும் தொழில்துறை குழு நிச்சயமாக தமிழகத்தை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT