Published : 28 Jun 2014 09:40 AM
Last Updated : 28 Jun 2014 09:40 AM
இஸ்ரோ சார்பில் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர் செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் வரும் 30-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 49 மணி நேர கவுன்ட்டவுன் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் வரும் 30-ம் தேதி காலை 9.52 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 714 கிலோ எடையுள்ள ‘ஸ்பாட்-7’, ஜெர்மனியைச் சேர்ந்த ‘அய்சாட்’, சிங்கப்பூரின் ‘வெலோக்ஸ்’, கனடாவின் என்எல்எஸ் ரகத்தைச் சேர்ந்த 2 செயற்கைக் கோள்கள் ஆகியவற்றை பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் சுமந்து செல்கிறது.
ராக்கெட் ஏவுவது தொடர்பான விஞ்ஞானிகளின் இறுதிகட்ட ஆலோசனைகள் வெள்ளிக்கிழமை நடந்தது. ராக்கெட்டை ஏவுவதற்கான 49 மணி நேர கவுன்ட் டவுன் இன்று (சனிக்கிழமை) காலை 8.49 மணிக்கு தொடங்குகிறது.
3 நிமிடம் தாமதம் ஏன்?
பிஎஸ்எல்வி-சி 23 ராக்கெட்டை 30-ம் தேதி காலை 9.49 மணிக்கு விண்ணில் ஏவ ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. 3 நிமிடங்கள் தாமதமாக 9.52 மணிக்கு ராக்கெட்டை ஏவ தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிருபர்களிடம் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது தொடர்பாக விஞ் ஞானிகள் குழுவினர் வெள்ளிக் கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினர். அப்போது, விண்ணில் மிதக்கும் 13 ஆயிரம் வகையான குப்பைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். குப்பைகள் அதிகம் இருப்பதால், ராக்கெட் செலுத்தப்படும் நேரத்தை சிறிது தாமதப்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்தனர். எனவே, ராக்கெட் ஏவப்படும் நேரம் 3 நிமிடம் தாமதமாக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இதுவரை மொத்தம் 26 பிஎஸ்எல்வி ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இதில், 25 ராக்கெட்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளன. 2011-ம் ஆண்டு அக்டோபரில் பிஎஸ்எல்வி-சி18 ராக்கெட்டும் ஒரு நிமிடம் தாமதமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT