Published : 20 Apr 2022 01:37 AM
Last Updated : 20 Apr 2022 01:37 AM

ஆளுநர் கான்வாய் தாக்குதல்: 'சட்ட விரோதமாக மிரட்டலாம் என நினைக்கிறார்கள்' - அமித் ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்

சென்னை: "தமிழக ஆளுநரின் கான்வாய் மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதல் முன்னெப்போதும் இல்லாதது. கடந்த சில நாட்களாக நாங்கள் எச்சரித்தும் தமிழக முதல்வர் இந்த விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மாநிலத்தில் மோசமடைந்துள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை குறித்த ஆழ்ந்த கவலையில் இந்த கடிதத்தை எழுதுகிறோம். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கடந்த மூன்று நாட்களாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை தருமபுரி ஆதினத்தை சந்திக்க செல்லும் வழியில், திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக் கொடி காட்டியதுடன், கொடி கம்பங்களையும், கற்களையும், தண்ணீர் பாட்டில்களையும் கான்வாய் மீது வீசினர்.

இந்த போராட்டம் திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டதாக தெரிகிறது. விசிக, திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இதேபோன்றொரு போராட்டம் பிரதமர் மோடி சென்னை வந்தபோதும் நடந்தது. தங்கள் சித்தாந்தத்திற்காக, இதுபோன்ற சட்ட விரோதமான வழிகளில் அரசியலமைப்பின் அதிகாரத்தில் உள்ளவர்களை மிரட்டலாம் என திமுக நினைக்கிறது.

இதனால், 'கவர்னர் ஒரு கொலைகாரன்' என்பது போன்ற முழக்கங்கள் அந்தக் கூட்டத்தில் எழுப்பப்பட்டன. இதுபோன்ற முழக்கங்கள் எழுப்பியவர்கள்மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல் ஆளுநர் கான்வாய் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியவர்களை தடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்த்தது. போராட்டத்தில் தங்கள் கடமைகளை செய்யத் தவறிய அதிகாரிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.

ஆளுநருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால், இந்த திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசால் மக்கள் படும் துயரம் கற்பனை செய்ய முடியாதது என்பது தெளிவாகிறது. இந்த சம்பவம் மாநிலத்தின் ஆபத்தான சட்டம் ஒழுங்கு நிலைமையை பிரதிபலிக்கிறது. எப்போதெல்லாம் திமுகவின் அரசியல் சரிவை சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் இதுபோன்ற வன்முறை போராட்டங்களை அக்கட்சி கையில் எடுக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஆளுநரின் பிரச்சனை அல்ல என்பதை திமுக உணர வேண்டும்.

எனவே, திரைமறைவில் இருந்து இந்த வன்முறை போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மற்றும் போராட்டத்தை தடுக்க தவறியவர்கள் மீது தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x