Published : 19 Apr 2022 08:16 PM
Last Updated : 19 Apr 2022 08:16 PM
சென்னை: சட்டவிரோத கனிமக் கடத்தலை தடுக்கும் பொருட்டு, கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்துதல் கட்டாயமாக்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் சுரங்கங்கள் மற்றும் கனிமவளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த சுரங்கங்கள் மற்றும் கனிமவளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, குவாரிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் நலன் மற்றும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, குவாரி தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய நிதி மூலம் நலத்திட்டங்களை செயல்படுத்துதல், அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படும் கனிமங்களை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணித்து தடுத்து நிறுத்த 1 கோடி ரூபாய் செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் சுரங்கங்கள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். அவர் வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள்:
> சட்டவிரோத கனிமக் கடத்தலை தடுக்கும் பொருட்டு, கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சுரங்கம் மற்றும் குவாரிகளிலிருந்து கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கணினி தொழில்நுட்பம் மூலம் நேரடியாக கண்காணித்து சட்டவிரோத கனிமக் கடத்தலை தடுக்கும் பொருட்டு, கனிமம் ஏற்றி செல்லும் அனைத்து வாகனங்களையும் கணினி தொழில் நுட்பத்தின் மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். எனவே, குத்தகைதாரர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் செலவில் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்துதல் கட்டாயமாக்கப்படும்.
> குவாரிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் நலன் மற்றும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, குவாரி தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய நிதி மூலம் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
தமிழகத்தில் செயல்படும் அனைத்து சுரங்கம் மற்றும் குவாரிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் நலன் மற்றும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, குவாரி தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான பாதுகாப்பு உபகரணங்கள், குழந்தைகள் காப்பகம், குடிநீர் வசதிகள், குடியிருப்புகள், சமூக நலக்கூடங்கள் மற்றும் மருத்துவ வசதிகளை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய நிதியின் மூலம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
> அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படும் கனிமங்களை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணித்து தடுத்து நிறுத்த 1 கோடி ரூபாய் செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, புதிய திட்டம் ஒன்று வகுக்கப்படும்.
அண்டை மாநிலங்களுக்கு உரிய அனுமதியின்றி கனிமங்கள் கடத்தப்படுவதாக அவ்வப்போது பெறப்படும் புகார்களை கருத்தில் கொண்டு, மாநில எல்லைகளில் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கனிமக் கடத்தலை தடுத்து நிறுத்துவது அவசியமாகும். இது தொடர்பாக சென்னை , இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் கலந்தாலோசித்து, ஒரு கோடி ரூபாய் செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, புதிய திட்டம் ஒன்று வகுக்கப்படும்.
> சிறுகனிமங்கள் குத்தகை உரிமம் வழங்க இணையதளத்தின் மூலம் பொது ஏலத்திற்கு கொண்டுவரும் பொருட்டு, தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள், 1959-ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
பெருங்கனிமங்கள் குத்தகை உரிமம் வழங்க, இணையவழி மின்னணு மூலம் பொது ஏலத்திற்கு கொண்டு வருவது தற்போது நடைமுறையில் உள்ளது. ஏல முறையில் வெளிப்படைத் தன்மைக்கும், ஏலதாரர்கள் அதிகளவு பங்கேற்பதற்கும் இணையவழி மின்னணு பொது ஏலம் உதவும். எனவே, இம்முறையினை சிறுகனிமங்களுக்கும் விரிவுபடுத்தும் வகையில், தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள், 1959-ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
> கிராபைட் செதில்களின் உற்பத்தி 120 கோடி ரூபாய் செலவில் அதிகரிக்கப்படும்.
உயர்வெப்பத்தில் நிலைத்தன்மை,வேதியியல் வினைக்கு எதிர்ச்செயலற்ற தன்மை போன்ற ஆற்றல்களால் கிராபைட் ஒரு இன்றியமையாத பொருளாக நவீன தொழில்களில் விளங்கி வருகிறது. தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கு சிவகங்கை மாவட்டத்தில் கிராபைட் சுரங்கமும், கிராபைட் தாதுவினை சுத்திகரித்து அதனை பிற தொழில்களுக்கு பயன்படும் வகையில் அதிக கரிச்சத்து (carbon content) உள்ள கிராபைட் செதில்களாக (Graphite Flakes) உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையும் உள்ளது. இந்த தொழிற்சாலையின் உற்பத்தித் திறன் ஆண்டிற்கு 6,000 மெட்ரிக்டன் ஆகும்.
தற்போது வளர்ந்து வரும் நவீன தொழில்களுக்குத் தேவையான கிராபைட் செதில்களின் தேவையை கருத்திற்கொண்டும், மின்கலங்கள் (EV Batteries), கிராபைட் கம்பிகள் (Graphite Rods) போன்ற புதிய பொருட்களின் உற்பத்திக்கு இது பயன்படு பொருளாக இருப்பதாலும், கிராபைட் செதில்களின் தற்போதைய உற்பத்தியை 6,000 மெட்ரிக் டன்னிலிருந்து 25,000 மெட்ரிக் டன்னாக 120 கோடி ரூபாய் செலவில் உயர்த்தப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...