Published : 19 Apr 2022 06:57 PM
Last Updated : 19 Apr 2022 06:57 PM

இந்தியா - இலங்கை இடையே பாக் ஜலசந்தியை 10 மணி நேரத்தில் நீந்திக் கடந்த மும்பை மாணவர்

பாக் ஜலசந்தி கடலில் நீந்தும் அன்சுமான், தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தேசியக் கொடியுடன் அன்சுமான்

ராமேஸ்வரம்: இந்தியா - இலங்கைக்கு இடையே உள்ள தனுஷ்கோடி - தலைமன்னாரை இணைக்கும் பாக் ஜலசந்தியை 10 மணி நேரத்திற்குள் நீந்தி நவி மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவர் அன்சுமான் இன்று சாதனை படைத்தார்.

மகராஷ்டிரா மாநிலம் நவி மும்பையைச் சேர்ந்த சந்திப் ஜிங்க்ரான் - கிரன் தம்பதியினரின் மகன் அன்சுமான் (16) இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மாநில மற்றும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையிலுள்ள தலைமன்னாரிலுந்து தனுஷ்கோடிக்கு வரையிலும் உள்ள பாக் ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்திய வெளியுறவுதுறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சகத்திற்கு அனுமதி கோரியிருந்தார்.

இந்திய - இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில், அவரது தந்தை ஜிங்க்ரான், பயிற்சியாளர்கள் கோகுல் காமத் மற்றும் அமித் அவலே ஆகியோருடன் இலங்கைக்கு விமானத்திற்கு சென்றார். செவ்வாய்கிழமை அதிகாலை 05.15 மணியளவில் தலைமன்னாரிலுந்து நீந்தத் தொடங்கிய அன்சுமான் செவ்வாய்கிழமை பிற்பகல் 03.04 மணியளவில் (9 மணி நேரம் 49 நிமிடங்களில் நீந்தி) தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை வந்தடைந்தார். இந்த சாதனையை தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பார்வையாளர் விஜய் குமார் உறுதிப்படுத்தினார்

தொடர்ந்து செவ்வாய்கிழமை மாலை அன்சுமானுக்கு பாராட்டு விழா ராமேசுவரம் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் முத்தூட் ஃபைனான்ஸ் சார்பாக நடைபெற்றது. இதில் பேசிய அன்சுமான் தனது சாதனை குறித்து மாஸ்டர் அன்சுமான் ஜிங்ரான் பேசுகையில், ''பாக் ஜலசந்தியைக் கடக்கும் எனது பணியை முடித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்த மூன்று வருடங்களில் ஏழு கடல்களில் நீந்தி சாதனை படைக்க வேண்டும்'' என்றார்.

இதற்கு முன்னதாக தலைமன்னார், தனுஷ்கோடி இடையேயான பாக் ஜலசந்தி கடற்பகுதியை 28.03.2019 அன்று தேனியைச் சேர்ந்த ஆர்.ஜெய் ஜஸ்வந்த் தனது 10 வயதிலும், 12.04.1994 அன்று பன்னிரண்டு வயதில் குற்றாலீசுவரனும், 20.03.2022 அன்று மும்பையைச் சேர்ந்த ஜியா ராய் (13) என்ற ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியும், 29.03.2022 அன்று தேனியைச் சேர்ந்த சிநேகன் (14) ஆகியோர் குறைந்த வயதுகளில் நீந்தி கடந்துள்ளனர். மேலும், அன்சுமான் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்த 19வது நீச்சல் வீரர் ஆனார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x