Published : 19 Apr 2022 06:22 PM
Last Updated : 19 Apr 2022 06:22 PM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு தனி தேர்வாணையம், மத்திய அரசின் நிதியுதவியை 70 சதவீதமாகவும் உயர்த்தி வழங்குவது ஆகிய 2 அறிவிப்புகளையாவது புதுச்சேரி வருகையின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிறைவேற்றித்தர வேண்டும் என்று புதுச்சேரி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் கோரியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "புதுச்சேரி அரசுக்கு குரூப் சி மற்றும் டி பணியிடங்கள் மட்டுமே நிரப்ப அனுமதி இருந்தது. இந்நிலையில் குரூப் டி பணியிடங்கள் நீக்கப்பட்டுவிட்டது. அதேசமயம் குரூப் சியிலும் சில பணியிடங்கள் அரசிதழ் பதிவு பெற்ற பணியிடங்களாக மாற்றப்பட்டுவிட்டன. இதனால் அந்தப் பணியிடங்களும் யூபிஎஸ்சி மூலம் நிரப்பப்படுமோ என்ற அச்சம் புதுச்சேரி மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனைப் புரிந்துகொண்ட பாஜக கடந்த தேர்தலில் புதுச்சேரி அரசில் உள்ள இடங்களை நிரப்ப தனி தேர்வாணையம் அமைக்கப்படும் என்று அறிவித்தது.
அதுபோல் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஜம்மு காஷ்மீரைப்போல் மத்திய அரசின் பங்கு 70 சதவீதமாகவும், மாநில அரசின் பங்கு 30 சதவீதமாகவும் இருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்தபின்னரும் இவைகளை நிறைவேற்றாமல் உள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 24ம் தேதி புதுச்சேரி வரவுள்ளார்.
புதுச்சேரி வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் புதுச்சேரி பாஜகவினர் தேர்தல் அறிவிப்புகள் அனைத்தையும் நிறைவேற்றக் கோரி மனு அளித்து வலியுறுத்த வேண்டும். அதுபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலின்போது பாஜக கட்சி சார்பில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள், பிரதமர் மற்றும் தான் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு தனக்கும் பங்கும், கடமையும் உள்ளது என்பதை உணர்ந்து, சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற முன்வர வேண்டும்.
குறைந்த பட்சம் இந்த வருகைக்காக புதுச்சேரிக்கு தனி தேர்வாணையம், மத்திய அரசின் நிதியுதவியை 70 சதவீதமாகவும் உயர்த்தி வழங்குவது ஆகிய 2 அறிவிப்புகளையாவது நிறைவேற்றித்தர வேண்டும்" என்று வைத்திலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment