Published : 19 Apr 2022 12:48 PM
Last Updated : 19 Apr 2022 12:48 PM
சென்னை: கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் தேர்தலை செல்லாது என அறிவிக்க கோரி அதிமுக கவுன்சிலர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த மார்ச் 4-ம் தேதி நடத்தப்பட்டது. அப்போது 5 அதிமுக கவுன்சிலர்களை தவிர மற்றவர்கள், வாக்குச்சீட்டை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக கவுன்சிலர் சுப்புராயலுவிடம் காண்பித்த பின் வாக்குப்பெட்டியில் போட்டதன் மூலம் தேர்தல் ரகசியத்தை மீறிவிட்டனர். எனவே தேர்தலை செல்லாது என அறிவிக்க கோரி அதிமுக கவுன்சிலர் பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், கவுன்சிலர்கள் தேர்தல் முடிந்ததும், 16 கவுன்சிலர்களையும் திமுகவின் சுப்புராயலு ஊட்டி அழைத்துச் சென்றார். பதவியேற்புக்கு அழைத்து வரப்பட்ட அவர்கள், தலைவர் தேர்தல் வரை பெரம்பலூரில் சுப்புராயலு கட்டுப்பாட்டில் இருந்ததனர்.
தலைவர் தேர்தலின்போது தேர்தல் ரகசியத்தை அம்பலப்படுத்தியதால் தேர்தலை ரத்து செய்யக் கோரி மாநில தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தேன். அந்த மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியல் சட்டப்படி, தேர்தல் நடவடிக்கைகளை எதிர்த்து தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும். எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT