Published : 19 Apr 2022 12:29 PM
Last Updated : 19 Apr 2022 12:29 PM
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட மேற்கொள்ளப்பட்ட நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக 2005 ஆம் ஆண்டு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் உள்ள அவசர தேவைக்கான பிரிவின் கீழ் நில உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்காமல் மேற்கொள்ளப்பட்ட இந்த நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்து நில உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி தண்டபாணி, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் அவசர தேவை திட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணி வராது எனக் குறிப்பிட்டு, கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
இதுநாள் வரை நிலங்களை சுவாதீனம் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும், நிலத்துக்கான இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய நீதிபதி, இதிலிருந்து நிலம் அவசர தேவைக்காக கையகப்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT