Published : 19 Apr 2022 12:10 PM
Last Updated : 19 Apr 2022 12:10 PM
சென்னை: "முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து தற்போது வரை, 666 திருக்கோயில்களில் 844 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் தலைமையில் இருக்கின்ற தமிழக அரசு ஓர் ஆன்மிக அரசு" என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. கனிம வளங்கள் துறை, தொழில் துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
அப்போது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன், "திருக்கோயில்களில் அன்னதான திட்டம் என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அந்த திட்டம் 752 திருக்கோயில்களுக்கு சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது எத்தனை கோயில்களில் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது? அப்படி அன்னதான திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறதா?" எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, " திட்டம் யாரால் கொண்டுவரப்பட்டது என்பதைவிட, அந்தத் திட்டம் மேலும் தரமாக பயனுள்ள திட்டமாக மாற்றப்படுவது யாருடைய ஆட்சிக்காலத்தில் என்றால், அது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்காலத்தில்தான்.
இந்த அன்னதான திட்டம் தமிழகத்தில் உள்ள 754 திருக்கோயில்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாளொன்றுக்கு 75 ஆயிரம் பக்தர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள். உணவுத் தரத்திற்கு மத்திய அரசால் வழங்கப்படுகின்ற BHOG என்ற சான்றிதழை, இந்தியாவிலேயே 341 திருக்கோயில்களுக்கு பெற்ற ஒரே மாநிலம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இயங்குகின்ற தமிழகம்தான்.
இதுபோன்றுதான் இரண்டு கோயில்களுக்கு முழுநேர அன்னதான திட்டம் கடந்த ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்டது. அதில் ஒன்று பழனி, மற்றொன்று ஸ்ரீரங்கம். தமிழக முதல்வர் அந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்தோடு, அண்மையில் திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய 3 திருக்கோயில்களில் தரமான முழுநேர அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்து பக்தி பசியையும், அதே நேரத்தில் வயிற்றுப் பசியையும் போக்கியிருக்கிறார்" என்றார்.
மேலும் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்ச சேகர்பாபு, "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற 7.5.2021 தொடங்கி இதுநாள்வரை 666 திருக்கோயில்களில் 844 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு ஆன்மிக அரசு தமிழக முதல்வர் தலைமையில் இருக்கின்ற தமிழக அரசு" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT