Published : 09 Apr 2016 07:48 PM
Last Updated : 09 Apr 2016 07:48 PM
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் தென்காசி தொகுதியில் காங்கிரஸ், தமாகா இடையே நேரடி போட்டிக்கு வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 41 தொகுதிகளில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் மொத்தமுள்ள 6 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கான செல்வாக்கு இருக்கிறது. கடந்த கால சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இதை வெளிப்படுத்துகின்றன. இதை கருத்தில் கொண்டுதான் தென்மாவட்ட தொகுதிகளை காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுத்திருக்கிறது.
ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தமாகா கட்சி உருவாகியிருப்பதால், காங்கிரஸுக்கான பாரம்பரிய வாக்குகள் எவ்வாறு சிதறும் என்பதை அக் கட்சியினரே கணிக்கமுடியாமல் இருக்கிறார்கள்.
தென்காசி, நாங்குநேரி, வைகுண்டம், குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 6 தொகுதிகளிலும் கடந்த பல தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 2011 தேர்தலில் திமுகவுக்கு எதிரான அலை இருந்த நிலையிலும், அதனுடன் கூட்டணி அமைத்திருந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இருக்கும் முக்கிய தொகுதியான தென்காசியில், 1952-ல் சுப்பிரமணியபிள்ளை, 1962-ல் ஏ.ஆர்.சுப்பையா முதலியார், 1967-ல் ஐ.ஏ.சிதம்பரம்பிள்ளை, 1977-ல் எஸ்.முத்துசாமி கரையாளர், 1984-ல் டி.ஆர்.வெங்கடராமன், 1989, 1991-ல் எஸ். பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர். 1996-ல் தமாகா சார்பில் போட்டியிட்ட கே.ரவிஅருணன் வெற்றி பெற்றிருந்தார்.
இதனால் இத் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கென்று நிலைத்த செல்வாக்கு இருப்பதை கருத்தில் கொண்டு தற்போது இத்தொகுதியை ஒதுக்கியிருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியில் இத்தொகுதியில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் எழுந்துள்ளது. அதேநேரத்தில் தமாகா போட்டியிடும் என தமாகா நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இது தொடர்பாக சென்னையில் முகாமிட்டுள்ள தமாகா நிர்வாகிகளிடம் கேட்டபோது, `திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம் தொகுதிகளை அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. கூட்டணி உறுதியானால் தென்காசி தொகுதி நிச்சயம் தமாகாவுக்கு கிடைக்கும்’ என்றனர்.
அவ்வாறு நடந்தால், கடந்த 1996 தேர்தலில் தமாகா, காங்கிரஸ் இடையே நிலவிய போட்டியை மீண்டும் எதிர்பார்க்கலாம். அத் தேர்தலில் தமாகா வேட்பாளர் ரவிஅருணன் 60,758 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் ஆலடி சங்கரய்யா 29,998 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தை பிடித்திருந்தார். அதுபோன்றதொரு போட்டியை எதிர்கொள்ள தென்காசி தயாராகி வருவதாக தெரிகிறது.
தென்காசி, ஆலங்குளம் தொகுதிகளை அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது. கூட்டணி உறுதியானால் தென்காசி தொகுதி நிச்சயம் தமாகாவுக்கு கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT