Published : 18 Apr 2022 02:21 PM
Last Updated : 18 Apr 2022 02:21 PM
சென்னை: மாநில நீர்வளத் துறையின் நிலத்தடி நீர்மட்ட ஆய்வுகளின்படி, பிப்ரவரி 2021-ல் இருந்து நீர்மட்டத்துடன் ஒப்பிடும்போது, தற்போது (பிப்ரவரி 2022) 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 0.24 முதல் 4.59 மீட்டர் வரை அதிகரித்துள்ளதாகவும், இதர 12 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 0.12 முதல் 0.47 மீட்டர் குறைந்துள்ளதாகவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாம்மைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை 4 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் கூடியுள்ளது. இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் பதிலளித்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், மாநில மற்றும் மாவட்ட அளவிலான வறட்சி கண்காணிப்பு மையம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்:
மாநில அளவிலான வறட்சி கண்காணிப்பு மையம், இந்திய வானிலை ஆய்வு மையம், தேசிய தொலையுணர்வு மையம், தேசிய பயிர் நிலவரங்கள் முன்கணிப்பு மையம், மாநில நீர்வள ஆதார மையம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை ஆகியவற்றின் உள்ளீடுகளை பெற்று மாநில அளவில் வறட்சி நிலையை மாநில மற்றும் மாவட்ட அளவிலான வறட்சி கண்காணிப்பு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் முறையே 17 சதவீதம் மற்றும் 59 சதவீதம் கூடுதலாக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மாநில நீர்வளத் துறையின் நிலத்தடி நீர்மட்ட ஆய்வுகளின்படி, பிப்ரவரி 2021-ல் இருந்து நீர்மட்டத்துடன் ஒப்பிடும்போது, தற்போது (பிப்ரவரி 2022) 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 0.24 முதல் 4.59 மீட்டர் வரை அதிகரித்துள்ளது.
இதர 12 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 0.12 முதல் 0.47 மீட்டர் குறைந்துள்ளது. மாவட்ட அளவிலான வறட்சி கண்காணிப்பு மையமானது மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஓர் அங்கமாக செயல்படும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மையமானது மாவட்ட ஆட்சியரைத் தலைவராக கொண்டு அவரது கட்டுப்பாட்டில் செயல்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...