Published : 18 Apr 2022 01:59 PM
Last Updated : 18 Apr 2022 01:59 PM
சென்னை: அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நீல்சன் IQ நிறுவனத்தின் சென்னை விரிவாக்க மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.18) திறந்து வைத்தார். இந்நிறுவனம், தனது விரிவாக்க மையத்தின் மூலம் 2500 நபர்களுக்கு, தரவு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுத் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை, போரூரில் அமைந்துள்ள அமெரிக்க நாட்டின் நீல்சன் IQ நிறுவனத்தின் விரிவாக்க மையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.18) தொடங்கி வைத்தார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட நீல்சன் நிறுவனம், சந்தை ஆராய்ச்சி மற்றும் தகவல் தரவுகள் ஆகிய துறையில் அமையப்பெற்றுள்ள ஒரு உலகளாவிய நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. தரவு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுகள் மூலம், பல தரப்பட்ட சந்தைகளில், வாடிக்கையாளர்களின் கொள்முதல் நடத்தையைப் புரிந்து கொள்ளும் நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
எதிர்கால உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்திடும் வகையில், உலகத் தரம் வாய்ந்த வசதிகளை உருவாக்குவதற்காக, இந்நிறுவனம், விரிவாக்கத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. சென்னை, போரூரில் அமைக்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் விரிவாக்க மையத்தின் மூலம் 2,500 நபர்களுக்கு, தரவு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுத் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளது. இந்நிறுவனத்தின் மிகப் பெரிய சந்தையான அமெரிக்காவின் தேவைகளை முழுமையான அளவில் பூர்த்தி செய்திடும் அளவிற்கு, சென்னையில் அமையவுள்ள இந்த உலகளாவிய ஆய்வு மையம், உலகெங்கிலும் உள்ள நீல்சன் நிறுவனத்தின் மிகப் பெரிய மையமாக செயல்படும்.
தரவு அறிவியல் மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு, இணையச் சட்டப் பாதுகாப்பு, தரவு மேலாண்மை போன்ற துறைகளில் விரிவாக்கம் மேற்கொள்ளவும், ஏற்கெனவே உள்ள தனது உள்ளகத் திறன்களை வெகுவாகக் கட்டமைப்பதற்காகவும், இந்த விரிவாக்கத் திட்டத்தினை சென்னையில் நீல்சன் நிறுவனம் அமைத்துள்ளது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பகுப்பாய்வு மற்றும் புத்தாக்கங்களுக்கு உலகளாவிய மையமாக சென்னை விளங்கி வரும் நிலையில், நீல்சன் நிறுவனத்தின் இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம், இந்நிலை மேலும் வலுப்படும். அதுமட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள மனிதவள மூலதனத்தை வெகுவாக மேம்படுத்துவதோடு, அதிநவீன தொழில் நுட்பங்களில் உயர்தர வேலைவாய்ப்புகளையும் கணிசமான அளவில் ஏற்படுத்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT