Published : 18 Apr 2022 05:55 AM
Last Updated : 18 Apr 2022 05:55 AM

மாற்றுத் திறனாளிக்கான கட்டமைப்பு வசதி உள்ளதா? - 200 சுற்றுலா தலங்கள், 700 அரசு கட்டிடங்களில் ஆய்வு நிறைவு

சென்னை: தமிழகம் முழுவதும் 200 சுற்றுலா தலங்கள், 700 அரசு கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றகட்டமைப்பு வசதிகளை ஆய்வுசெய்யும் பணி நிறைவடைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்கள், அரசு மற்றும் தனியார் கட்டிடங்களை பயன்படுத்த ஏதுவாக அங்கு சாய்வு தளம், வீல் சேர்,மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துமாறு தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது.

இருப்பினும், தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படவில்லை.

இந்த நிலையில், சுற்றுலா தலங்கள், அரசு கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மாற்றுத் திறனாளிகள் நலத்துறை முடிவு செய்தது.

தனியார் நிறுவனம் மூலமாக..

இதற்காக, தனியார் ஆய்வு நிறுவனத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் 200 சுற்றுலா தலங்கள், 700 அரசு கட்டிடங்களில் ஆய்வு செய்யும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இதுதொடர்பாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 200 சுற்றுலா தலங்கள், 700 அரசு கட்டிடங்களில் சாய்வு தளம், மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக வாகனம் நிறுத்துமிடம், வீல் சேர் பயன்படுத்துவதற்கான வசதி, தனி கழிப்பறை உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக தாமதமான இந்த பணிகள்தற்போது நிறைவடைந்துள்ளன.

துறை நிதியில் இருந்து பணிகள்

விரைவில், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விவரத்தை தெரிவித்து மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளை அந்தந்த துறைகளின் நிதியில் இருந்து மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம்.

அறிவுறுத்துவது மட்டுமின்றி, குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் நிறைவடைவதை கண்காணித்து உறுதி செய்வோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x