Published : 18 Apr 2022 08:00 AM
Last Updated : 18 Apr 2022 08:00 AM

‘இந்து தமிழ் திசை’, ராம்ராஜ் காட்டன் சார்பில் `அன்பாசிரியர் விருது' வழங்கும் விழா; மாணவர்களின் தனித் திறன்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்: அன்பில் மகேஸ் வேண்டுகோள்

சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் அன்பாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன், லட்சுமி செராமிக்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.முத்துராமன், இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் கல்வி மைய நிர்வாக அதிகாரி ஏ.ராம், சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் தீனதயாளன், ‘பிரம்மோஸ்’ விஞ்ஞானி ஏ.சிவதாணுப்பிள்ளை, வனம் இந்தியா பவுண்டேஷன் செயலர் வி.சுந்தர்ராஜன், இந்திய-ரஷ்ய தொழில் வர்த்தக சபை செயலர் பி.தங்கப்பன். (அடுத்த படம்) அன்பாசிரியர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு நினைவுப் பரிசு வழங்கிய `இந்து தமிழ் திசை' ஆசிரியர் கே.அசோகன், வர்த்தகப் பிரிவுத் தலைவர் ஷங்கர் வி.சுப்பிரமணியம். உடன், பொதுமேலாளர் டி.ராஜ்குமார்.படங்கள்: ம.பிரபு

சென்னை: மாணவர்களின் தனித் திறன்களைக் கண்டறிந்து ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற ‘அன்பாசிரியர்’ விருது வழங்கும் விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்தார்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் மீது பேரன்பும், அவர்களின் வளர்ச்சி குறித்த அக்கறையும் கொண்ட சிறந்த ஆசிரியர்களைக் கவுரவிக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘அன்பாசிரியர்’ விருதைவழங்குகிறது. 2020-ல் முதல்முறையாக ராம்ராஜ் காட்டனுடன் இணைந்து ‘அன்பாசிரியர்’ விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து, ‘அன்பாசிரியர்2021’ விருதுக்கு தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 532 ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். அதில் 425 பேர் முதல்கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இதில் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு இறுதிச்சுற்று தேர்வு நடத்தப்பட்டு, மூத்த கல்வியாளர்கள் அடங்கிய தேர்வுக் குழு மூலம் 46 பேர் விருதுக்குத் தேர்வாகினர்.

இவர்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னை ரஷ்ய கலாச்சார அறிவியல் மையத்தில் நேற்று விமரிசையாக நடைபெற்றது.

இதில் ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் தலைமை வகித்துப் பேசியதாவது: தற்போதைய திமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகள் நலனில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இல்லம் தேடிக் கல்வி உட்பட, நடைமுறைக்கு உகந்த பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.

அதிகாரிகள் சுதந்திரச் சிந்தனையுடன் செயல்படுகிறார்கள். பத்திரிகைத் துறையில் பணியாற்றும் எங்களுக்கு மொழிதான் தெய்வம். அத்தகைய மொழி அறிவை வளர்க்கும் ஆசிரியர்களுக்கு நன்றிக் கடனாகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

தனியார் பள்ளிகளைவிட அரசுப்பள்ளிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. அதை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் அரசுப் பள்ளிகளின் பெருமைகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

சாதனை செய்யும் ஓர் ஆசிரியரைப் பாராட்டினால், அதன்மூலம் 10 பேருக்கு உற்சாகம் பிறக்கும். விருதுக்குத் தகுதியான ஆசிரியர்களை, நடுவர்களைக் கொண்டு நேர்மையுடனும், எவ்விதப் பாரபட்சமின்றியும் தேர்வு செய்துள்ளோம்.

அடுத்தகட்டமாக, மாவட்டத்துக்கு ஒரு ஆசிரியர் என்பதை விரிவுபடுத்தவும், தனியார் பள்ளி ஆசிரியர்களை இணைப்பது தொடர்பாகவும் திட்டமிட்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

‘பிரம்மோஸ்’ விஞ்ஞானி ஏ.சிவதாணுப்பிள்ளை பேசும்போது, ‘‘ஆசிரியர் பணி மிகவும்புனிதமானது. மனித மூளையில் 86 பில்லியன் நியூரான்கள் உள்ளன. அவற்றை முழுமையாகப் பயன்படுத்தினால், அரிய சாதனைகளைப் படைக்க முடியும். இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்கூட தனது மூளையில் 5 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளார். எனவே, மாணவர்கள் தங்களது முழு திறனையும் பயன்படுத்த ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்’’என்றார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 46 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது:

இத்தகைய விருதுகளும், அங்கீகாரமும் மற்ற ஆசிரியர்களையும் சிறப்பாகப் பணியாற்ற ஊக்கமும், மாணவர்களை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல வைக்கும் உத்வேகமும் வழங்கும்.

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் 2-வது பெற்றோராகத் திகழ்கின்றனர். ஏனெனில், நம்மிடம் படித்த குழந்தைகள் அடுத்த நிலைக்குச் செல்லும்போது, அதைக் கண்டு பெருமை கொள்பவர் ஆசிரியர்.

கல்வி என்பது குழந்தைகளை எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லும் கடவுச்சீட்டு. அந்தக் கல்வியைகொடுத்து, குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்வதிலும், சமுதாயம் அறவழியில் இயங்குவதிலும் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

தற்போது அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு பக்கபலமாக, கல்வியைத் தாண்டி மாணவர்களின் தனித் திறன்களைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் பணிகளையும் ஆசிரியர்கள் முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

விழாவில், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன், லட்சுமி செராமிக்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.முத்துராமன், இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் கல்வி மைய நிர்வாக அதிகாரி ஏ.ராம், சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் தீனதயாளன், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அருள்முருகன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ், வனம் இந்தியா பவுண்டேஷன் செயலர் வி.சுந்தர்ராஜன், ‘இந்து தமிழ் திசை’ வர்த்தகப் பிரிவுத் தலைவர் ஷங்கர் வி.சுப்பிரமணியம், பொதுமேலாளர் டி.ராஜ்குமார் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவை, லட்சுமி செராமிக்ஸ், இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், சங்கர் ஐஏஎஸ் அகாடமி, நியூஸ்-7 ஆகியவை இணைந்து வழங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x