Published : 18 Apr 2022 07:17 AM
Last Updated : 18 Apr 2022 07:17 AM
கொடைக்கானல்: தொடர் விடுமுறை காரணமாக கடந்த 4 நாட்களில் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் இயற்கை எழிலை ரசித்துள்ளனர்.
கொடைக்கானலுக்கு கோடை சீசனான மே மாதத்தில் மட்டும் ஆண்டுதோறும் 7 லட்சம் பேர் வந்து இயற்கை எழிலை பார்த்துச் செல்வர். இந்த ஆண்டு பள்ளித் தேர்வுகள் மே மாதம் தொடங்குகிறது. எனவே முன்னதாகவே குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். வாரம்தோறும் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
இந்த வாரம் சித்திரை முதல் நாள் (வியாழக்கிழமை) தமிழ்ப் புத்தாண்டு, வெள்ளிக்கிழமை புனித வெள்ளி, வழக்கமான சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் அரசு விடுமுறையால் சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரித்தது. முதல் நாளே மலைச் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தான் கொடைக்கானலில் நுழைய முடிந்தது.
கடந்த 4 நாட்களில் கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் முழுமையாக நிரம்பியிருந்தன. ஆயிரக்கணக்கான வாகனங்கள் கொடைக்கானல் மலைப் பகுதியில் வலம் வந்தன. இதனால் சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
கொடைக்கானலுக்கு கடந்த 4 நாட்களில் சுமார் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றதாக சுற்றுலாத் துறையினர் கணக்கிட்டுள்ளனர். கோடை சீசனில் ஒரு மாதத்தில் சுமார் 7 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர். ஆனால் கடந்த 4 நாட்களிலேயே 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து சென்றிருப்பது வழக்கத்தைவிட அதிகம் என வனத் துறையினர் கூறினர்.
இதமான தட்ப வெப்பநிலையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர். மேகக் கூட்டங்கள் இறங்கி வந்து சுற்றுலாப் பயணிகளை தழுவிச் சென்றன. பலர் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர். மோயர் பாய்ண்ட், பிரையண்ட்பூங்கா, பைன்பாரஸ்ட் ஆகிய பகுதிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT