Last Updated : 18 Apr, 2022 07:57 AM

1  

Published : 18 Apr 2022 07:57 AM
Last Updated : 18 Apr 2022 07:57 AM

போக்குவரத்து நெரிசலை உடனடியாக கட்டுப்படுத்த சென்னையில் ‘கூகுள் மேப்’ மூலம் கண்காணிப்பு: சமூக வலைதளங்களில் புகார் அளித்தால் 5 நிமிடத்தில் நடவடிக்கை

சென்னை: போக்குவரத்து நெரிசலை கூகுள் மேப் மூலம் கண்காணித்து, வாகன நெரிசல் உடனடியாக சீரமைக்கும் பணியில் போக்குவரத்து போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும், சமூக வலைதளங்கள் மூலம் பெறப்படும் புகார்களை 5 நிமிடத்தில் தீர்வு கண்டு வருகின்றனர்.

சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா பொது முடக்கத்துக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படுவதால் வாகனங்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அண்ணா சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, பூந்தமல்லி சாலை உட்பட சென்னையின் அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் காணப்படுகிறது.

இதனால் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். சில நேரங்களில் ஆம்புலன்ஸ்கள் கூட நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன.

இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் ‘கூகுள் மேப்’ மூலம் வாகன நெரிசலை கண்காணித்து அந்த பகுதிகளுக்கு போக்குவரத்து போலீஸார் விரைந்து சென்று நெரிசலை சீர்படுத்தும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக காவல் ஆணையர் அலுவலகத்தில் ராட்சத திரை அமைக்கப்பட்டு, பெண் போலீஸார் ஒருவர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் வாகன நகர்வுகளின் அடிப்படையில் ராட்சத திரையில் 4 வண்ணங்களை காட்டும். அதன்படி பச்சை, ஆரஞ்ச் நிறம் குறிப்பிட்டிருந்தால் வழக்கம்போல் வாகனங்கள் சீரான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றன என அர்த்தம். சிகப்பு மற்றும் அடர் சிகப்பு காண்பித்தால் அந்த பகுதிகளில் கடும் நெரிசல் காணப்படுகிறது என பொருள். இதையடுத்து அந்த பகுதிக்குக்கு உட்பட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்படும்.

மேலும், இதுதொடர்பான தகவல் போலீஸ் அதிகாரிகளின் வாட்ஸ்அப் குழுவிலும் பகிரப்படும். சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து நெரிசலை சரி செய்து அதுகுறித்த தகவலை வாட்ஸ்அப் குழுவில் புகைப்படத்துடன் பகிர வேண்டும். இவ்வாறு வாகன நெரிசல் உள்ள பகுதிகள் உடனுக்குடன் அடையாளம் கண்டு சரி செய்யப்பட்டு வருவதாக சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, ‘போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தி இருந்தால் அது தொடர்பான தகவல்களை, வாட்ஸ்அப் (9003130103), இன்ஸ்டாகிராம் (chennaitrafficpolice), ட்விட்டர் (@ChennaiTraffic), ஃபேஸ்புக் (greaterchennaitrpolice) ஆகிய சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கலாம். அடுத்த 5 நிமிடத்தில் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, புகார் அளித்தவர்களுக்கு அது குறித்த தகவலும் தெரிவிக்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x