Published : 24 Apr 2016 02:26 PM
Last Updated : 24 Apr 2016 02:26 PM
மதுரை மாவட்ட அதிமுகவில் வேட்பாளர்கள் மாற்றம் உள்ளிட்ட குழப்பங்களால் 3 தொகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் தேர்தல் பணிகள் மிகவும் மந்தமாக நடப்பதால் அக்கட்சி தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற கோஷத்துடன் அதிமுகவினர் தேர்தலை எதிர்கொண்டுள்ளனர். ஆனாலும், வேட்பாளர் அறிவிப்பிலேயே பலர் அதிருப்தியடைந்தனர். மதுரை மேற்குத் தொகுதியில் மட்டுமே எதிர்பார்த்தபடி அமைச்சர் செல்லூர் கே. ராஜூவுக்கு வாய்ப்பு கிடைத்தது. மற்ற தொகுதிகளில் வாய்ப்பு கிடைக்காத அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் 500-க்கும் அதிகமானோர் ஈடுபாட்டுடன் தேர்தல் பணியில் ஈடுபடவில்லை. இவர்களை ஒருங்கிணைக்க முடியாமல் வேட்பாளர்கள் தவிக்கின்றனர்.
மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் பணி குறித்து கட்சியினர் கூறியதாவது: திமுகவில் 3 தொகுதிகளில்தான் வேட்பாளர் பிரச்சினை உள்ளது. அதிமுகவில் 7 தொகுதிகளில் இந்த பிரச்சினை உள்ளது. மதுரை வடக்குத் தொகுதியில் கிடைத்த வாய்ப்பு பறிக்கப்பட்டதால் எம்.எஸ். பாண்டியனைச் சார்ந்த சமூகத்தினர் வருத்தத்தில் உள்ளனர்.
அமைச்சர் செல்லூர் கே.ராஜூவுக்கு முதல் நாள் பிரச்சாரத்திலேயே மறியல் நடக்கும் அளவுக்கு, மதுரை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் பிரச்சினை இல்லாத பகுதிகளாக தேர்ந்தெடுத்து பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. மேற்குத் தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை வடக்கில் ராஜன் செல்லப்பா, திருமங்கலத்தில் அமைச்சர் உதயகுமார் என 3 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் பணி நடக்கிறது.
வேட்பாளர் பெயர் அறிவிப்பு கடந்த 4-ம் தேதி வெளியாகியும் 15 நாட்கள் வரை சில தொகுதிகளில் எந்த பணியும் நடக்காமல் இருந்தன. கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் பணியைத் தொடங்கி உள்ளனர். மதுரை மத்தி, கிழக்கு, மேலூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் திமுகவின் தேர்தல் பணி வேகம் பிடித்துள்ளது. இது அதிமுக தொண்டர்களை கவலையடையச் செய்துள்ளது. அதிமுகவில் மேலும் 3 தொகுதிகளில் வேட்பாளர் மாற்றம் இருக்கலாம் என தீவிரமாக பரவும் தகவல் தேர்தல் பணியை முடக்குகிறது. முதல்வர் ஜெயலலிதா ஏப்.27-ல் மதுரையில் பிரச்சாரம் செய்கிறார். இதற்கு ஆட்களை திரட்டுவது உள்ளிட்ட பணிகளுக்கு கணிசமாகச் செலவிட வேண்டியுள்ளது. அதுவரை வேட்பாளரை மாற்றவில்லை எனில், இதன் பின்னர் பணியை தீவிரப்படுத்த வேட்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். தற்போது பணியில் தொய்வு காணப்பட்டாலும், கட்சித் தலைமையின் வழிகாட்டுதல் மற்றும் உதவி பெரிதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இது சரியாக நடந்தால்தான், மற்ற கட்சிகளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த முடியும். இதைப்பற்றி நிர்வாகிகள் கண்டுகொள்ளாத நிலையில், தொண்டர்கள்தான் பெரும் வருத்தத்தில் உள்ளனர் என்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT