Published : 30 Jun 2014 09:27 AM
Last Updated : 30 Jun 2014 09:27 AM

தமிழக மீனவர்கள் 17 பேர் சிறைப்பிடிப்பு

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். ஞாயிற்றுக்கிமை அதிகாலை மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். அப்போது, எல்லை மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளைக் கைப்பற்றி அதிலிருந்து 17 ராமேசுவரம் மீனவர்களை சிறைப்பிடித்தனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் தலைமன்னாரிலுள்ள கடற்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை இலங்கை நீதிமன்றம் விடுமுறை என்பதால் திங்கள்கிழமை மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஜூன் மாதத்தில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 44 விசைப்படகுகள் கைப்பற்றப்பட்டு 182 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டன.

182 மீனவர்களில் 147 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பிவிட்டனர். மீதமுள்ள 35 மீனவர்கள் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் சிறைகளிலும், மன்னார் கடற்தொழில் இயக்குநர் அலுவலகத்திலும் உள்ளனர்.

மீனவர்களை இலங்கை அரசு விடுவித்து வந்தாலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 44 விசைப்படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடித் தளவாடங்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு மட்டும் ரூ.10 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x