Published : 17 Apr 2022 07:20 AM
Last Updated : 17 Apr 2022 07:20 AM
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மகுடம் சூட்டும் ‘அன்பாசிரியர் - 2021’ விருதுகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இன்று வழங்குகிறது. லட்சுமி செராமிக்ஸ், இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் ஆகிய நிறுவனங்களும் இணைந்து இந்த விருதை வழங்க உள்ளன. உடன் கொண்டாடுகிறது சங்கர் ஐஏஎஸ் அகாடமி. விருது விழாவுக்கான அரங்கத்தை ரஷ்ய கலாச்சார மையம் வழங்குகிறது. நிகழ்ச்சியை பதிவுசெய்து நியூஸ் 7 தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது. குடிநீர் வசதியை ரெப்யூட் நிறுவனம் ஏற்படுத்தி தருகிறது.
ஏற்கெனவே 2020-ம் ஆண்டில் முதல்முறையாக ‘அன்பாசிரியர்’ விருது வழங்கப்பட்டது. அதற்கு கிடைத்த பேராதரவும், பெருமகிழ்ச்சியும் ‘அன்பாசிரியர் 2.0’வை நிகழ்த்த உந்தித் தள்ளியது.
இந்நிலையில், ‘அன்பாசிரியர் 2021’ விருதுக்கு விண்ணப்பிக்குமாறு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தின் 38 மாவட்டங்கள், புதுச்சேரியை சேர்ந்த ஆர்வமும், ஆற்றலும் மிக்க 532 ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 425 பேர் முதல்கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இறுதிச்சுற்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
46 ஆசிரியர்களுக்கு விருது
தேர்வுக் குழு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 46 ஆசிரியர்களுக்கு ‘அன்பாசிரியர் 2021’ விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சிறப்புரையாற்றி விருதுகளை வழங்க உள்ளார்.
மதியம் 3 மணி முதல்..
விருது விழா சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் இன்று மதியம் 3 மணி முதல் நடைபெறும். விழாவை நேரலையில் காண விரும்புவோர் https://www.htamil.org/00462 என்ற லிங்க்கில் பதிவு செய்து கொள்ளவும். https://www.htamil.org/00220 என்ற லிங்க்கில் யூ-டியூப் மூலமாக காணலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT