Published : 16 Apr 2022 03:37 PM
Last Updated : 16 Apr 2022 03:37 PM
காரைக்கால்: "புதுச்சேரி சட்டப்பேரவை செயலகத்துக்கு நிதி அதிகாரம் பெறப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்களுக்கான அனைத்து தேவைகளையும் படிப்படியாக பிரதமர் மோடியின் ஒத்துழைப்போடு மாநில அரசு நிறைவேற்றும்" என அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் உறுதிபடக் கூறியுள்ளார்
காரைக்காலில் இன்று (ஏப்.16) செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், "அசாமில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் காமென்வெல்த் சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, அரசியல் ஈடுபாடு உள்ளிட்டவை தொடர்பான எனது கருத்துகளைப் பதிவு செய்தேன்.
என்னுடைய கருத்துகளைப் பதிவு செய்து கொண்டு அதனை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை செயலகத்துக்கு நிதி அதிகாரம் பெறப்பட்டுள்ளது. இனி நிதி குறித்த கோப்புகள் தலைமை செயலருக்கோ, நிதித்துறை செயலருக்கோ அனுப்பப்படாது. கடந்த 41 ஆண்டுகளாக பின்பற்றப்படாத புது நடைமுறையாக இந்த அதிகாரம் பெறப்பட்டுள்ளது.
இதை புதுச்சேரி மக்களுக்கான வரப்பிரசாதமாக கருதுகிறோம். படிப்படியாக புதுச்சேரி மக்களுக்கான அனைத்து தேவைகளையும் பிரதமர் மோடியின் ஒத்துழைப்போடு மாநில அரசு நிறைவேற்றும்" இவ்வாறு செல்வம் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT