Published : 16 Apr 2022 12:00 PM
Last Updated : 16 Apr 2022 12:00 PM
மதுரை: மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்.16) நடைபெற்றது.இதில் கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "மதுரையில் இன்று (16-4-2022) காலை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய நிகழ்வைக் காணும் பொருட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். கோவிட் பாதிப்பால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின், இந்த வைபவம் நடப்பதால், பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்ட நிலையில், இன்று காலை அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பங்குபெற்று, திரும்பும் வேளையில் கூட்டநெரிசலில் சிக்கி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவர் பலத்த காயங்களுடனும், 7 பேர் சாதாரண காயங்களுடனும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் துயர சம்பவத்தை அறிந்த மிகவும் வேதனைப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட ஆணையிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment