Published : 16 Apr 2022 11:50 AM
Last Updated : 16 Apr 2022 11:50 AM

'தமிழக பாஜக தலைமைப் பொறுப்பை தானே கவனிக்கலாம் என்று நினைத்துவிட்டாரா ஆளுநர்?' - முரசொலி நாளிதழ் விமர்சனம்

ஆளுநர் ஆர்.என்.ரவி | கோப்புப் படம்.

சென்னை: தமிழக பாஜகவின் தலைமை பொறுப்பைத் தானே கவனிக்கலாம் என்று நினைத்து விட்டாரா ஆளுநர் ஆர்.என்.ரவி என்று முரசொலி நாளிதழ் கடுமையான விமர்சித்துள்ளது.

நீட் தேர்வு விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும் என்பது உள்பட சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 14 அன்று ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு மற்றும் திமுகவின் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன.

இந்தநிலையில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி நாளிதழில், "தமிழக பாஜகவின் தலைமை பொறுப்பைத் தானே கவனிக்கலாம் என்று நினைத்து விட்டாரா ஆளுநர் என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. இதுகுறித்து முரசொலி தலையங்கத்தில் கூறியிருப்பதாவது, " பாஜவிற்கு தமிழகத்தில் இருக்கும் ஒன்றரையணா ஓட்டுக்கும் உலை வைக்க தமிழக ஆளுநர் முடிவு எடுத்துவிட்டதாகத் தெரிகிறது. அவரது நடவடிக்கை அப்படித்தான் உள்ளது.

தன்னை ஏதோ ஜனாதிபதியாக ஆளுநர் நினைத்துக் கொள்கிறார் போலும், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன் வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டியது தான் அவரது வேலையே தவிர, அப்படியே வைத்திருப்பது அவரது வேலை அல்ல.

சரியாகச் சொன்னால், அவருக்கு இருக்கும் கடமையைக் கூடச் சரியாகச் செய்யாமல் - அவசியமற்ற அரசியல் செய்து கொண்டு இருக்கிறார் ஆளுநர், யாரோ சிலரால் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

ஒருவேளை தமிழக பாஜகவின் தலைமைப் பொறுப்பைத் தானே கவனிக்கலாம் என்று நினைத்து விட்டாரா ஆளுநர்.

இப்படி ஒரு சட்டமுன்வடிவு குறித்து முடிவு எடுக்க கால நிர்ணயம் கிடையாது. அதனால் நான் எப்போது வேண்டுமானாலும் அதனை அனுப்புவேன்” என்று ஆளுநர் சொல்லி வருகிறார்.

கால நிர்ணயம் வைக்கவில்லை என்றால், அவரே தனக்குத் தானே ஒரு கால நிர்ணயத்தை வைத்துக் கொள்ள வேண்டியதுதானே?

இத்தகைய சூழலிலும் முதல்வர்ர் மு.க.ஸ்டாலின் மிகமிகப் பொறுமையாகச் செயல்படுகிறார். ஆளுநருக்கும் மாநில அரசுக்குமான உறவு தொடர்ந்து இணக்கமாகவும் சுமூகமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார் முதல்வர். அத்தகைய உறவையே தமிழ்நாடு அரசு விரும்புகிறது. ஆனால் ஆளுநரின் போக்கு இதனை விரும்பாததாக அமைந்துள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x