Published : 16 Apr 2022 06:24 AM
Last Updated : 16 Apr 2022 06:24 AM

நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு பட்டா வழங்கியும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை: திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு

திருப்பூர்: நீர்நிலை புறம்போக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட திருப்பூர் மாநகர்மற்றும் சாமளாபுரம் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு கருப்பராயன் கோயில் வீதியில் 300-க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். குடியிருப்பின் அருகே சாமளாபுரம் குளம் அமைந்திருந்ததால், குளத்தின் அருகே இருந்த வீடுகளை கடந்த 4-ம் தேதி வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் இடித்தனர். அங்கு குடியிருந்த 88 பேருக்குசெந்தேவிபாளையத்தில் 1.20 சென்ட் அளவில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதையடுத்து, பயனாளிகள் பலர் அங்கு குடியேறினர்.

இதேபோல, திருப்பூர் மாநகர எல்லைக்குள் 46-வது வார்டு காசிபாளையம் பகுதியில் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்புகள், நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டன. அங்கு வசித்த 21 பேருக்கு மாநகர எல்லைக்குள் சென்னிமலைபாளையத்தில் தலா ஒரு சென்ட் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கண்ட இரண்டு பகுதிகளிலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுதொடர்பாக சாமளாபுரம் முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் கே.எஸ்.ஞானசம்பந்தன் கூறும்போது, "நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி, பட்டா வழங்கியதை வரவேற்கிறோம். ஆனால், செந்தேவிபாளையத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பகுதி, குண்டும் குழியுமாக உள்ளது. குடியேற மிகவும் சிரமப்படுகின்றனர். பொதுமக்கள் குடியேறும் வகையில், மண்கொட்டி மேடாக்கி, குடியமர வழிவகை செய்ய வேண்டும். ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில்உயரழுத்த மின் கம்பிகள் உள்ளன. பிரதமரின் தொகுப்பு வீடுகள் திட்டத்தின் கீழ், வீடு மற்றும் கழிவறை உள்ளிட்டவை கட்டித்தரப்பட வேண்டும். இதுதொடர்பாக ஆட்சியருக்கும் கடிதம்அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.

திருப்பூர் மாநகரில் வெளியேற்றப்பட்ட 21 குடும்பத்தினருக்கு, சென்னிமலைபாளையத்தில் தலா ஒரு சென்ட் காலிமனை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் குடிநீர்,மின்விளக்கு உட்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.கழிவறை வசதி இல்லாததால், பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மாநகர எல்லைக்குள் சென்னிமலைபாளையம் வருவதால், தற்காலிகத் தீர்வாக நடமாடும்கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

பெண்கள், குழந்தைகள் அதிகளவில் இருப்பதால், பாதுகாப்பு கருதி அவர்கள் கட்டும் வீடுகளுக்கு உடனடியாக மின் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x