Published : 16 Apr 2022 06:08 AM
Last Updated : 16 Apr 2022 06:08 AM
விருதுநகர்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் செல்வாக்கு 3 மாதங்களில் உயரும் என விருதுநகரில் பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் காட்டுநாயக்கர் சமூக பெண்கள் குறி சொன்னார்கள்.
விருதுநகர் மாவட்டம், சின்னமூப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய் யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பழங்குடியினப் பெண்கள் சுய உதவிக் குழுக்களை சந்தித்தார். பின்னர், மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் குறி சொல்லும் காட்டுநாயக்கர் சமூகப் பெண்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்களிடம் எல்.முருகன் தனது எதிர்காலம் குறித்து குறி கேட்டார். அப்போது அந்தப்பெண்கள், அடுத்த 3 மாதங்களில் அவரது செல்வாக்கு உயரும் என்றனர். அந்தப்பெண்களுக்கு எல்.முருகன் நன்றி கூறினார்.
பின்னர் காட்டுநாயக்கர் சமூக மக்களிடம் அமைச்சர் தெலுங்கு மொழியில் பேசினார். அவர் கூறுகையில், காட்டு நாயக்கர் சமூக மக்களின் மனதுக்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையும் நன் றாக அமைய பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார். மக்களின் நிலையை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்வதுடன், இப் பகுதியில் மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
நிதி உதவி
விருதுநகர் கருப்பசாமி நகரில் சதீஷ்குமார் என்பவரின் வீட்டில் கடந்த 13-ம் தேதி கட்டுமானப் பணியில் ஈடுபட்ட ரோசல்பட்டியைச் சேர்ந்த ஜக்கம்மாள் (55), முருகன் (24), கார்த்திக் ராஜா (28), கருப்புசாமி நகரைச் சேர்ந்த ஜெயசூரியா (22) ஆகியோர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் எல்.முருகன், தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment