Published : 13 Apr 2016 04:50 PM
Last Updated : 13 Apr 2016 04:50 PM
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கு 2 கட்சிகள் விருப்பம் தெரிவிப்பதால், இறுதி முடிவு எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளைப் பிரித்துக் கொள்வதில், மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்று கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. ஒரு தொகுதியை 2 கட்சிகள் கேட்பதால் சிக்கல் எழுந்துள்ளது.
இழுபறி
திருவண்ணாமலை தொகுதியை மதிமுக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கேட்பதாகத் தெரிகிறது. தி.மலை இல்லை என்றால் கலசப்பாக்கம் அல்லது கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ஒன்றை கொடுக்க வேண்டும் என்று தமாகா வலியுறுத்துகிறது. அதில், கலசப்பாக்கம் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கீழ்பென்னாத்தூர் தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கேட்டுள்ளன.
தாமதம்
செங்கம் (தனி) மற்றும் வந்தவாசி (தனி) தொகுதிகளில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது. அதில், செங்கம் தொகுதி மீது தேமுதிக பார்வை விழுந்துள்ளது. மேலும் ஆரணி, போளூர், செய்யாறு ஆகிய 3 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. இவற்றில் ஆரணி அல்லது போளூரில் போட்டியிட மதிமுகவும் விரும்புகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையால், மக்கள் நலக் கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி வடிவம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து மக்கள் நலக் கூட்டணி யினர் கூறும்போது, “மக்கள் நலக் கூட்டணியில் பிரதான 6 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தொகுதி எண்ணிக்கை முடிவு பெற்றதுபோல், தொகுதி பங்கீடும் விரைவாக முடிவு பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தொகுதி பங்கீடு தாமதமாவதால் எந்த பாதிப்பும் இல்லை. களப் பணிக்கான அடித்தளக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி விட்டோம். வேட்பாளர் அறிவிப்பு வெளி யானதும், எங்களது பணி தொடங்கும்” என்றனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, “விருப்பம் தெரிவித்துள்ள தொகுதியைப் பெற வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. அவர்கள் கேட்ட தொகுதியை தவிர்த்து, வேறு தொகுதியை கொடுத்தால் ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். வேறு தொகுதியில் போட்டியிட அவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதையும் தெளிவாக கூறுகின்றனர். அதே நேரத்தில், அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ள தொகுதியைக் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கினாலும், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும் தயாராக உள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT