Published : 16 Apr 2022 12:32 AM
Last Updated : 16 Apr 2022 12:32 AM
பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்கள் குறித்து தவறான காட்சி இருந்ததாக சொல்லப்பட்டது அதிர்ச்சியளித்தது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'பீஸ்ட்' படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.
இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்ததாக குற்றச்சாட்டுகள் வெளியாகின. இதனிடையே, இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மக்களவை எம்பி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "எல்லா இடங்களிலும் ஆர்எஸ்எஸ் செல்வாக்கு இருப்பதை தான் இது உணர்த்துகிறது. திரைக்களத்தை எப்படி அந்த அமைப்பு பயன்படுத்துகிறது என்பது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபணமாகியுள்ளது. காஷ்மீர் பைல்ஸ் என்பன அதற்கு உதாரணம்.
பீஸ்ட் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் அந்தப் படத்தில் இஸ்லாமியர்கள் குறித்து தவறான காட்சி இருந்ததாக சொல்லப்பட்டது அதிர்ச்சியளித்தது. ஒருகாலத்தில் தமிழ் படங்களுக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும் எனப் போராடினோம். இப்போது வரக்கூடிய திரைப்படங்கள் எல்லாம் ஆங்கில பெயர் கொண்டே வெளியாகின்றன. சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான கருத்துக்களை பரப்பக்கூடிய படங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்னை குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம். இந்த மாதிரியான போக்கு தமிழகத்தில் தலைதூக்க கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT