Published : 15 Apr 2022 12:07 PM
Last Updated : 15 Apr 2022 12:07 PM

காற்றாலை, சூரிய ஒளிக்கு தனி மின்துறை அமைச்சகம்: அன்புமணி வலியுறுத்தல்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: மின்துறை அமைச்சகத்தை இரண்டாக பிரித்து நீர் மின்னுற்பத்தி, காற்றாலை மின்னுற்பத்தி, சூரிய ஒளி மின்னுற்பத்தி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதற்காக புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தை புதிதாக அமைக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இந்தியாவில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரம் உள்ளிட்ட புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தித் திறனில் தமிழகம் மீண்டும் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும், வருங்காலத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை, இன்னும் மின்சாரத்துறை அமைச்சகத்தின் ஓர் அங்கமாகவே செயல்பட்டு வருவது அதன் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்காது.

புவி வெப்பயமாதலின் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் 2021ம் ஆண்டுக்குப் பிறகு நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட அனல் மின் நிலையங்களைத் தொடங்கக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அது சாத்தியமில்லை என்றாலும் கூட, எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக அனல் மின் திட்டங்களை செயல்படுத்துவதை நிறுத்திக் கொண்டு, அவற்றுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத புதுப்பிக்கவல்ல மின்சார உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

காற்றாலை மின்சாரம், நீர் மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் போன்ற இயற்கை ஆதாரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தூய்மை மின்சாரம் தான் புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆகும். புதுப்பிக்கவல்ல எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கான திறனில், சற்று பின்னடைவை சந்தித்திருந்த தமிழ்நாடு, இப்போது கர்நாடகத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு மீண்டும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தித் திறன் 15,914 மெகாவாட் ஆகும். காற்றாலை மின் உற்பத்தித் திறன் 8,606 மெகாவாட் ஆகவும், சூரிய ஒளி மின்னுற்பத்தித் திறன் 4,986 மெகாவாட் ஆகவும், நீர் மின்னுற்பத்தித் திறன் 2,322 மெகாவாட் ஆகவும் உள்ளது. புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தித் திறனில் தமிழகத்திற்கு அடுத்தப்படியாக 15,795 மெகா வாட்டுடன் கர்நாடகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கர்நாடகம் நினைத்தால் எந்த நிமிடமும் தமிழகத்தை மீண்டும் பின்னுக்கு தள்ள முடியும் என்பதால், முதலிடத்திற்காக இரு மாநிலங்களுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

சூரிய ஒளி மின்னுற்பத்தியைப் பொறுத்தவரை 7,738 மெகாவாட் மின்னுற்பத்தித் திறனுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகம் 7,469 மெகாவாட் திறனுடன் இரண்டாவது இடத்திலும், குஜராத் 5,708 மெகாவாட் திறனுடன் மூன்றாவது இடத்திலும், தமிழகம் 4,986 மெகாவாட் திறனுடன் நான்காவது இடத்திலும் உள்ளன. சூரிய ஒளி மின்னுற்பத்தி திறனை அதிகரிப்பதில் இந்த மாநிலங்களுக்கிடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. அடுத்த இரு ஆண்டுகளில், 2024-25ம் ஆண்டில், சூரிய ஒளி மின்சார உற்பத்தித் திறனை 30,000 மெகாவாட்டாக அதிகரிக்க ராஜஸ்தான் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

மற்றொருபுறம் குஜராத் மாநில அரசு கட்ச் குடா பகுதியில், 726 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பாலைவனப் பகுதியில், காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் 30,000 மெகாவாட் திறன் கொண்ட கலப்பு மின்னுற்பத்தித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் 2024ம் ஆண்டில் 15,000 மெகா வாட்டும், 2026ம் ஆண்டில் 30,000 மெகாவாட்டும் புதுப்பிக்கவல்ல மின்சாரம் கிடைக்கும். மராட்டியம், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களும் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தவுள்ளன. இவை அனைத்தும் இமாலயத் திட்டங்கள். இவை செயல்படுத்தி முடிக்கப்படும் போது அம்மாநிலங்களில் அனல் மின்னுற்பத்தியின் தேவை குறைந்து விடும். அது சுற்றுச்சூழலை பாதுகாக்க பெரிதும் உதவும்.

புதுப்பிக்கவல்ல எரிசக்தி திட்டங்களில் இந்த மாநிலங்களுடன் போட்டியிட வேண்டுமானால், அதற்காக தமிழக அரசு தொலை நோக்குப் பார்வையுடன் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் 2030ம் ஆண்டுக்குள் 20,000 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு குறைந்து ஒரு லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் தேவை. இவற்றை அடையாளம் கண்டு, சூரிய ஒளி மின்திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் சவாலான பணி ஆகும். அவ்வாறு செயல்படுத்தினாலும் கூட ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களை நெருங்க முடியாது.

ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பயன்படாத பாலைவனங்கள் உள்ளன. அவற்றில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்திட்டங்களை ஒரே இடத்தில் செயல்படுத்தலாம். இது தவிர தரிசு நிலங்களும் அங்கு ஏராளமாக உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் சூரிய ஒளி உற்பத்திக்குத் தேவையான நிலங்கள் இல்லை. இத்தகைய சூழலில் புதுமையான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதன் மூலமாக மட்டுமே புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தியில் மற்ற மாநிலங்களுடன் தமிழகத்தால் போட்டி போட முடியும்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் முதல் கட்டமாக தலா ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி திட்டத்தை செயல்படுத்தலாம். அதன்மூலம் குறைந்தது 12,000 மெகாவாட் மின்னுற்பத்தித் திறனை அடுத்த சில ஆண்டுகளில் ஏற்படுத்த முடியும். இதைக் கொண்டு அந்த ஊராட்சிக்குத் தேவையான மின்சாரத்தை தயாரித்துக் கொள்ளலாம் என்ற யோசனையை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இத்தகைய புதுமையான திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தான் மின்னுற்பத்தியில் தன்னிறைவு அடைய முடியும். சூரிய ஒளி மின்சார உற்பத்திச் செலவு மிகவும் குறைவு என்பதால், மின்வாரியமும் இழப்பைக் குறைத்து லாபத்தில் இயங்க முடியும். ஆனால், இவற்றையெல்லாம் இப்போதுள்ள மின்சார அமைச்சகக் கட்டமைப்பில் செய்ய முடியாது. மின்வெட்டை தவிர்க்கவும், மின்வாரியத்திற்கு கடன் பெறவுமே போராட வேண்டியுள்ள நிலையில், சவாலான இந்த பணிகளை சிறப்பாக செய்ய முடியாது.

எனவே, மின்துறை அமைச்சகத்தை இரண்டாக பிரித்து நீர் மின்னுற்பத்தி, காற்றாலை மின்னுற்பத்தி, சூரிய ஒளி மின்னுற்பத்தி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதற்காக புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தை புதிதாக அமைக்க வேண்டும். மத்திய அரசும், பல மாநிலங்களும் இத்தகைய அமைச்சகத்தை ஏற்படுத்தியுள்ளன.

தமிழக அரசும் இத்தகைய அமைச்சகத்தை ஏற்படுத்தி, புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தியில் பிடித்துள்ள முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். புதுப்பிக்கவல்ல எரிசக்தி குறித்த பாடப்பிரிவுகளும், ஆராய்ச்சித் திட்டங்களும் தமிழக பல்கலைக் கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, முழு வீச்சில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்." என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x