Published : 14 Apr 2022 11:12 PM
Last Updated : 14 Apr 2022 11:12 PM

அம்பேத்கர் பிறந்தநாள் விழா: சென்னையில் பாஜக, விசிகவினர் இடையே திடீர் மோதல் - ஒருவருக்கு பலத்த காயம்

சென்னை: சென்னையில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள்விழாவில் பாஜக, விசிக இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர்.

நாடு முழுவதும் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று நேற்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனிடையே, தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்த இருந்தனர்.

இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் அங்கு அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த இருந்தார். இதனால் ஒரே நேரத்தில் அங்கு குவிந்த இக்கட்சித் தொண்டர்கள் இடையே, கட்சி கொடி வைப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் மோதலாக மாறியது. இதனால் இக்கட்சி தொண்டர்களும் மாறிமாறி கட்சி கொடி நட்ட பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகளை கொண்டு தாக்கிக்கொண்டனர். மேலும் கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

பாஜகவை சேர்ந்த ஒருவருக்கு தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. பின்னர் அதிக போலீஸார் வரவழைக்கப்பட்டு அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், விரைவில் வழக்குப் பதியப்படும் என்று அறிவித்துள்ளது. பாஜக மற்றும் விசிக இடையேயான மோதலால் கோயம்பேடு பகுதியில் திடீர் பதற்றம் தொற்றிக்கொண்டது.

இதற்கிடையே, மோதல் தொடர்பாக திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில், "கோயம்பேடு அம்பேத்கர் சிலையில் நான் காலை (11.30மணி) மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேட்டியளித்துவிட்டுத் திரும்பினேன். அப்போது அங்கே குழுமியிருந்த பாஜகவினர் 'பாரத் மாதாகி ஜே' என கூச்சலிட்டுக் கொண்டே திடீர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். விசிக கொடிகளைப் பிடுங்கி எறிந்துள்ளனர். எதிர்ப்புத் தெரிவித்த விசிகவினர் மீது கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

அதில் தமிழ்க்கதிர் என்பவர் உட்பட மூன்றுபேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டு ரவுடிகளை ஏவி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ள சனாதனக் கும்பலான பாஜகவினரைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். புரட்சியாளர் அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைக்கு நேரெதிரான சனாதன கொள்கையைக் கொண்ட பாஜகவினருக்கு அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அருகதை இல்லை. இந்த நாடக அரசியலை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்." என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "இன்று அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற தமிழக பாஜக தொண்டர்களை, விசிக கட்சியினர் கல் வீசி காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். அன்பை போதித்த அம்பேத்கர் அவர்களின் உண்மையான அரசியல் வாரிசாக பாஜகவினர் அமைதி காத்தனர். நியாம் காக்க, காயம் பட்டு, சிகிச்சையில் உள்ளனர் எங்கள் தொண்டர்கள். வன்முறைக்கு எப்பொழுதும் வன்முறை தீர்வாகாது என்பதை முழுமையாக உணர்ந்தவர்கள் பாஜக கட்சியின் தொண்டர்கள். அண்ணலை மதிக்காது, அராஜகம் செய்பவர்கள், அன்பின் வழி, எங்களுடன் இணைந்து செயல்பட, மனந்திருந்தி வருவார்கள் என்கின்ற நம்பிக்கையுடன்" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x