Published : 14 Apr 2022 01:40 PM
Last Updated : 14 Apr 2022 01:40 PM
சென்னை: தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏவுமான செல்வபெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் அளிக்கும் இந்த தேநீர் விருந்தில் இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம் பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளது.
தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமைகளையும், தமிழக மக்களின் கோரிக்கைகளையும் நிராகரிப்பதோடு, இரட்டை ஆட்சிமுறை போன்ற செயல்பாடுகள் ஆளுநர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழக சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமலும், மற்ற முக்கிய மசோதாக்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக சட்டப்பேரவை மாண்பை சீர்குலைக்கும் நடவடிக்கைகள், பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமன பிரச்சினை, வேற்றுமையில் ஒற்றுமை என்னும் சித்தாந்தத்தை எதிர்க்கும் ஆளுநரின் பேச்சுகள் போன்ற நடவடிக்கைகளால் தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் எங்களது கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட யாரும் பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளோம்" என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இடது சாரிகள், விசிக தேநீர் விருந்தைப் புறக்கணித்துள்ள நிலையில், இன்று காலை தமிழக அரசும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது. அந்த வரிசையில் தற்போது காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT