Last Updated : 14 Apr, 2022 06:52 AM

 

Published : 14 Apr 2022 06:52 AM
Last Updated : 14 Apr 2022 06:52 AM

கோவை வனக்கோட்டத்தில் உயிரிழந்த 4 யானைகளின் உடலில் பூச்சிக்கொல்லி மருந்தின் பாதிப்பு: மண்டல தடய அறிவியல் ஆய்வக அறிக்கையில் தகவல்

கோவை சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட பெத்திக்குட்டை பகுதியில் ஆய்வு செய்த வனக் கால்நடை மருத்துவ குழுவினர்.

கோவை: கோவை வனக்கோட்டத்தில் உள்ள7 வனச்சரகங்களில் கடந்த 2020-ம்ஆண்டு முதல் 2022 மார்ச் 31-ம்தேதி வரை மொத்தம் 43 யானை கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. சிறுமுகை வனச் சரகத்துக்குட்பட்ட பெத்திக்குட்டை பகுதியில் மட்டும் 14 யானைகள் உயிரிழந்துள்ளன. பெத்திக்குட்டை வனப்பகுதி ஒருபுறம் பட்டா நிலங்களாலும், மறுபுறம் பவானிசாகர் அணையின் நீர் தேக்க பகுதியாலும் சூழப்பட்டுள்ளது. பெத்திக்குட்டை பகுதி முட்புதர் காடுகளைக் கொண்டது என்பதால், அங்கு போதிய உணவு கிடைக்காத சூழலில் நீர்தேக்கத்தை கடந்து அடர்வனப்பகுதியை அடைய வேண்டிய நிலை யானைகளுக்கு உள்ளது.

இந்நிலையில், பெத்திக்குட்டை பகுதியில் யானைகள் தொடர்ந்து உயிரிழப்பது தொடர்பாக ஆய்வுசெய்து, எதிர்காலத்தில் உயிரிழப்பை தவிர்ப்பது குறித்து அறிக்கை அளிக்க வனக் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவை வனத்துறை அமைத்தது. கோவை வனக் கோட்ட கால்நடை மருத்துவர் ஏ.சுகுமார், சத்தியமங்கலம் புலிகள் காப்பக உதவி கால்நடை மருத்துவர் எஸ்.சதாசிவம், ஓசூர் வனக் கால்நடை உதவி மருத்துவர் ஏ.பிரகாஷ், முதுமலை புலிகள் காப்பக வனக் கால்நடை உதவி மருத்துவர் கே.ராஜேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்றுமுன்தினம் பெத்திக்குட்டை பகுதியில் ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக, வனக் கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது: கோவை வனக் கோட்டத்தில் 2020-ம் ஆண்டு உயிரிழந்த 4 யானைகளின் உடலில் ‘ஆர்கனோ பாஸ்பரஸ்’ எனும் பூச்சிக்கொல்லி மருந்தின் பாதிப்பு (ஓபிசி) இருந்ததாக கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள மண்டல தடய அறிவியல் ஆய்வக அறிக்கையில் தெரியவந்தது. இதில், ஆனைகட்டி பகுதியில் உயிரிழந்த 65 வயதுள்ள ஒரு பெண் யானைக்கும் பாதிப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த யானை உயிரிழக்க குடல் அடைப்பு முக்கிய காரணம். தொடர்ச்சியாக பயிர்களை உட்கொண்டதால் ஓபிசி ‘பாசிடிவ்' என அறிக்கை வந்திருக்கலாம். மேலும், மேட்டுப்பாளையம், நெல்லித்துறை வனப்பகுதியில் உயிரிழந்த ஆண் யானையின் உடலிலும் பூச்சிக்கொல்லி மருந்தின் பாதிப்பு இருந்ததாக அறிக்கை கிடைத்துள்ளது. அந்த யானை உயிரிழக்க யானைகள் சண்டையால் ஏற்பட்ட காயங்கள்தான் காரணம்.

இதுதவிர, பூச்சிக்கொல்லி மருந்து பாதிப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள இரண்டு பெண் யானைகள் பெத்திக்குட்டை பகுதியில் உயிரிழந்தவை. அந்த யானைகளை பிரேத பரிசோதனை மேற்கொண்டபோது அதன் வயிற்றுப்பகுதியில் உணவுப் பொருட்கள் இல்லை. எனவே, நேரடியாக அந்த யானைகள் விஷம் வைத்து கொல்லப்படவில்லை. அவற்றின் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றில் பூச்சிக்கொல்லி மருந்து படிந்திருப்பதாக ஆய்வக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், எத்தனை சதவீதம் பூச்சிமருந்தின் அளவு இருந்தது என்பது அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

அதைவைத்துதான் உயிரிழப்புக் கான காரணத்தை அறிந்துகொள்ள முடியும்.

விஷம் வைத்து கொல்ல முடியாது

காட்டு யானைகளை நேரடியாக விஷம் வைத்து கொல்ல முடியாது. ஏனெனில், யானைகள் தங்களுக்கு ஏற்ற உணவை, சரியாக தேர்ந்தெடுத்து உண்ணும் திறன் கொண்டவை. வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிக்கப்பட்ட வேளாண் பயிர்களை பல ஆண்டுகளாக உட்கொண்டதன் விளைவாக இது ஏற்பட்டிருக்கலாம். உடலில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்தின் சதவீதத்தை அறிந்துகொள்ளவும், எதுபோன்ற பூச்சிக்கொல்லி மருந்து என்பது உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ளவும் நவீன தடய அறிவியல் தொழில்நுட்பம் கொண்ட ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஆய்வகத்துக்கு இனிமேல் மாதிரிகளை அனுப்பி பரிசோதிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். பெத்திக்குட்டையில் உயிரிழந்த யானைகளில் 2020 முதல் தற்போதுவரை 7 யானைகள் கல்லீரல் பாதிப்பால் உயிரிழந் துள்ளன. எனவே, மண்ணின் தன்மை, நீரின் தன்மையை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தோடு இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x