Published : 14 Apr 2022 06:40 AM
Last Updated : 14 Apr 2022 06:40 AM
கூடலூர்: பெரியாறு அணையைப் போன்று கண்ணகி கோயில் வழிபாட்டிலும் கேரளா அத்துமீறி செயல்படுவதுடன், பல்வேறு நெருக்கடிகளையும் தந்து கொண்டிருக்கிறது. இதனால் வழிபாட்டுக்கான தமிழகத்தின் உரிமை வெகுவாய் பறிபோய்க் கொண்டிருக்கிறது.
தமிழக எல்லையான கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள விண்ணேற்றி பாறையில் கண்ணகி கோயில் அமைந்துள்ளது. மதுரையை எரித்துவிட்டு வைகை ஆற்றின் கரை வழியே தலைவிரி கோலமாக இங்கு வந்த கண்ணகியை கோவலன் மங்கலநாண் பூட்டி விண்ணுலகம் அழைத்துச் சென்றதாக ஐதீகம். இதை மலை மக்களிடம் கேட்டறிந்த சேரன் செங்குட்டுவன், இங்கு கண்ணகிக்கு கோயில் எழுப்பினார். இதை பாண்டிய மன்னர்கள் புதுப்பித்தனர்.
ஆரம்ப காலத்தில் இப்பகுதி மக்கள் தீப்பந்தம், பெட்ரோமாக்ஸ் உதவியுடன் இரவில் தங்கி விழாக்கள் நடத்தி உள்ளனர். மாடு மேய்ப்பவர்கள் இங்கு தங்க பிரிட்டிஷ் அரசு அனுமதி அளித்தது. மேலும் கண்ணகி கோயிலுக்கான இடத்தையும் தானமாக வழங்கியது.
கோயிலின் தொன்மை குறித்து வரலாற்று ஆய்வாளர்களும், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றதன் விளைவாக ,1975-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் கூடலூர் அருகே பளியன்குடியில் இருந்து பாதை அமைக்கும் பணி தொடங்கியது. இருப்பினும் இப்பணி முழுமை அடையவில்லை.
இதை தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட கேரள அரசு தங்கள் மாநிலமான குமுளியில் இருந்து தேக்கடி, கொக்கரக்கண்டம் வழியாக 13 கி.மீ.க்கு ஜீப் செல்லும் வகையில் பாதை அமைத்தது. மேலும் கோயில் பகுதி கேரளாவில் அமைந்திருப்பதாகக் கூறி தொடர்ந்து வழிபாடு சார்ந்த பல உரிமைகளை தமிழகத்தில் இருந்து படிப்படியாக தட்டிப் பறிக்கத் தொடங்கியது.
தமிழகப் பாதையான பளியன்குடி வழியே கோயிலுக்குச் சென்றவர்களை மரம் வெட்டச் செல்வதாகக் கூறி கைது செய்தது. பிரிட்டிஷ் காலத்தில் ஒரு வாரம் நடைபெற்ற திருவிழாவை ஒரு நாள் திருவிழாவாக மாற்றியது. இது தொடர்பான செயல்பாடுகள் பக்தர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து மங்கலதேவி கண்ணகி கோயில் சீரமைப்புக் குழு நிர்வாகி க.எழில்அன்பன் கூறியதாவது: சித்திரை முழு நிலவு அன்று மாலை 6 மணி வரை கோயிலில் பக்தர்கள் வழிபாடு செய்யலாம். இதை கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக குறைத்து தற்போது பிற்பகல் 3 மணியாக குறைத்துள்ளது. தமிழக உரிமையை மீட்க பளியன்குடியில் இருந்து 6 கி.மீ. தூரம் உள்ள தமிழக வனப் பகுதியில் வாகனங்கள் செல்லும் வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும். இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் விழாவை நடத்த வேண்டும். பாரம்பரியமிக்க கோயிலை புனரமைக்கவும், விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கற்புக்கரசி கண்ணகி மங்கலதேவி திருப்பணி சேவா கேந்திரம் மாநில ஒருங்கிணைப்பாளர் சுடமலைமணி கூறுகையில், கோயிலின் முகப்பு மதுரை நோக்கியே அமைந்துள்ளது. கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வேயிலும் இக்கோயில் தமிழகப் பகுதியில்அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து அங்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன் வழிபாட்டு உரிமைகளையும் மீட்க வேண்டும் என்றார்.
பெரியாறு அணை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அணை மீது கேரளா ஆளுமை செலுத்தி பல்வேறு நெருக்கடிகளைத் தந்து கொண்டிருக்கிறது. இதேபோல் கண்ணகி கோயில் வழிபாட்டிலும் அடுத்தடுத்து பல்வேறு கெடுபிடிகளை ஏற்படுத்தி வழிபாட்டு உரிமைகளை ஒவ்வொன்றாய் பறித்து வருகிறது. எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT