Published : 27 Apr 2016 08:33 AM
Last Updated : 27 Apr 2016 08:33 AM
சரியான நேரத்தில் தவறான முடிவை எடுப்பவர் என்று தன் மீது வைக்கப்படும் விமர்சனத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ‘எனக்கு எதிராக சாதிக் கலவரத்தை தூண்ட திமுக சதி’ என்ற காரணத்தைச் சொல்லி தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்கிய வைகோ, எளிதில் உணர்ச்சிவசப்படும் குணத்தால் இதற்கு முன்பும் பலமுறை விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.
திமுகவில் ஸ்டாலினுக்கு பட்டா பிஷேகம் நடத்த முயற்சிப்பதாக சொல்லி தனிக் கழகம் கண்ட வைகோ, 1996-ல் ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தார். அதிமுக ஊழல் கட்சி, திமுக குடும்ப கட்சி என்ற விமர்சனத்தை முன்வைத்த அவருக்கு, சட்டப்பேரவைக்கு போக வேண்டுமா, நாடாளுமன்றத்துக்கு போக வேண்டுமா என்பதிலேயே பெரும் குழப்பம். அதனால் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒருசேர போட்டி யிட்டார். இரண்டிலுமே அடி வாங்கிய வைகோ, ‘காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது சில சந்தன மரங்களும் அடித்துச் செல்லப்படும். அப்படித்தான் அதிமுகவுக்கு எதிரான அலையில் நாங்களும் அடித்துச் செல்லப்பட்டு விட்டோம்’ என்று சமாதானம் சொல்லிக்கொண்டார்.
பின்னர் 1998 நாடாளுமன்றத் தேர்தலில் வாஜ்பாயை பிரதமராக்க வேண்டும் என்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவதாக சொன்ன வைகோ, சிவகாசியில் வெற்றியும் பெற்றார். 13 மாதங்களில் வாஜ்பாய் அரசை அதிமுக கவிழ்த்தபோது, ‘ஜெய லலிதா நம்பகத்தன்மை அற்றவர்’ என்று குற்றம்சாட்டினார். 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்தது. அந்த அணியில் இடம் பெற்ற வைகோ, ‘‘நாங்கள் திமுக கூட்டணியில் இணையவில்லை. திமுக தான் எங்கள் கூட்டணிக்கு வந்திருக் கிறது’’ என்று சாதுர்யம் பேசினார்.
ஆனால், 2001 சட்டப்பேரவைத் தேர் தலில் அதே திமுகவுடன் கூட்டணி பேசினார். வைகோ 25 தொகுதிகளைக் கேட்க, 21 தொகுதிகளுக்கு சம்மதித் தது திமுக. ஆனாலும், ‘நான் கேட்ட சங்கரன்கோவில் தொகுதியை தர மறுக்கிறார்கள்’ என்று சத்தில்லாத ஒரு காரணத்தைச் சொல்லி திமுகவுடனான கூட்டணிப் பேச்சை முறித்தார். கடைசியில், பாஜக போட்டியிடும் தொகு திகளைத் தவிர மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட மதிமுக, பெரும்பாலான இடங்களில் டெபாசிட் தொகையை பறிகொடுத்தது.
அதன்பிறகு 2002-ல் வைகோவை ‘பொடா’ சட்டத்தில் வேலூர் சிறையில் அடைத்தார் ஜெயலலிதா. இரண்டு முறை வேலூர் சிறைக்கும் ஒருமுறை பொடா நீதிமன்றத்துக்கும் நேரில் சென்று வைகோவை சந்தித்தார் கருணாநிதி. இதுவே, 2004 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு அச்சாரமானது. கரு ணாநிதியின் வேண்டுகோளை ஏற்று ஜாமீனில் வெளியில் வந்த வைகோ, வீட்டுக்குக்கூட போகாமல் அண்ணா அறிவாலயம் சென்றார். அவரை வரவேற்று முரசொலியில் கவிதை எழுதி விட்டு, சால்வையோடு காத்திருந்தார் கருணாநிதி.
‘‘என் வாழ்நாளில் இனி அண்ணன் கலைஞரை எதிர்க்க மாட்டேன். அரசியல் அனுபவம் எனக்கு கற்றுத் தந்த பாடம் இது’’ என்று அறிவாலயத்தில் நின்று உறுதிபட கூறினார் வைகோ. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகாசி, பொள்ளாச்சி, வந்தவாசி, திருச்சி ஆகிய தொகுதிகளை மதிமுகவுக்கு ஒதுக் கியது திமுக. ஆனாலும் பழநியை கேட்டு முரண்டு பிடித்தார் வைகோ. ‘‘உனக்கு நான்கு ‘சி’ தந்திருக்கிறேனே, பிறகு ஏன் கலக்கம்’’ என தனக்கே உரிய பாணியில் அவரை சமாதானப் படுத்தினார் கருணாநிதி. அந்த சமாதானத்தை தற்காலிகமாக ஏற்றாலும், கடைசி நேரத்தில் சிவகாசியில் தான் போட்டியிடாமல் சிப்பிப்பாறை ரவிச் சந்திரனை நிறுத்தினார் வைகோ.
இந்தத் தேர்தலில் நான்கு இடங்களையும் வென்ற மதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமளிக்க தயாராய் இருந்தது காங்கிரஸ் அரசு. தனது தெளிவற்ற முடிவால் அதை ஏற்க மறுத்த வைகோ, அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தார்.
2006 சட்டப்பேரவைத் தேர்தலி லும் திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடர்ந்தார் வைகோ. திருச்சியில் தேர்தல் சிறப்பு மாநாடு கூட்டிய திமுக, அங்கே வைகோவுக்கும் கட்-அவுட்கள் வைத்து அழைப்பிதழிலும் முக்கியத்துவம் தந்தது. ஆனால், மாநாட்டுக்கு ஒருநாள் முன்னதாக போயஸ் கார்டனுக்கு போன வைகோ, ‘‘நாடாளுமன்றத் தேர்தலில் நான் சிறை யில் இருக்கும்போதே, எல்.ஜி.யை கட்டாயப்படுத்தி கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திட வைத்த திமுக, இப் போதும் என்னை நம்பவைத்து கழுத்தறுக்கப் பார்க்கிறது. பட்டத்து இளவரசருக்கு பட்டம் சூட்டுவதற்காக என் கட்சியை நசுக்கப் பார்க்கிறார்கள்’’ என்று பரபரப்பாக பேட்டி அளித்தார்.
அந்தத் தேர்தலில் மதிமுகவுக்கு 35 தொகுதிகளை அதிமுக தந்தது. அப்போதும் சிவகாசியில் வைகோ போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், அங்கு ஆர்.ஞான தாஸை நிறுத்தினார். அந்தத் தேர்தலில் 6 தொகுதிகளில் மட்டுமே மதிமுக வெற்றி பெற்றது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் நீடித்த மதிமுக, 4 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் மட்டும் வென்றது.
கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 25 தொகுதிகள் கேட்ட வைகோவுக்கு 12 தொகுதிக்கு மேல் இல்லை என கைவிரித்தார் ஜெயலலிதா. இதை ஏற்காமல் கூட்டணியை முறித்துக் கொண்டார். கடைசி வரை காக்க வைத்து முதுகில் குத்திவிட்டதாக அதிமுக மீது புகார் கூறினார். அதிமுக தரும் தொகுதிகளை பெற்றுக்கொண்டு போட்டியிடலாம் என்று பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் கூறினர். சில தொகுதிகளில் மட்டும் தனித்துப் போட்டியிடலாம் என சிலர் கருத்து தெரிவித்தனர். இரண்டையும் புறக் கணித்துவிட்டு, ‘தேர்தலில் மதிமுக போட்டியில்லை’ என்ற புதிய முடிவை எடுத்தார் வைகோ.
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்த வைகோ, 7 தொகுதிகளை பெற்று போட்டியிட்டார். ஆனால், ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. பதவியேற்பு விழாவுக்கு வைகோவையும் அழைத் தார் மோடி. ஆனால், ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்ததைக் கண்டித்து, மோடி பதவியேற்பு நாளில் டெல்லியில் கறுப்புக் கொடி காட்டினார். கூட்டணி யைவிட கொள்கைதான் முக்கியம் என்று சொல்லி, பாஜக அணியில் இருந்து வெளியேறினார்.
கடந்த ஆண்டு மு.க.தமிழரசு மகன் திருமணத்தில் கலந்துகொண்ட வைகோ, மறுபடியும் உணர்ச்சிவசப்பட்டார். ‘தாயி னும் சால பரிவோடு என்னிடத்தில் பழகும் ஆரூயிர் அண்ணன் கலை ஞர்’ என்று நெக்குருகியவர், ‘தமிழகத்தில் மதவாத சக்திகள் மீண்டும் தலை யெடுக்க ஆரம்பிகின்றன. அதைத் தடுக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணை வோம். அதற்காக எதையும் செய்ய சித்தமாக இருக்கிறேன்’’ என்றார்.
அதற்கு அடுத்த சில மாதங்களிலேயே மக்கள் நல கூட்டியக்கத்தை தொடங் கிய வைகோ, தேர்தலுக்காக அதை மக்கள் நலக் கூட்டணியாக மாற்றினார். கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று கேட்டபோது, ‘முதல்வர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிப்பது ஜனநாயக மரபு இல்லை’ என்று சொன்னவர், விஜயகாந்த் வந்ததும் ‘இவர் தான் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்’ என்று முன்மொழிந்தார்.
முன் எப்போதும் இல்லாத வகையில், இந்தத் தேர்தலில் தொட்டதுக்கெல்லாம் உணர்ச்சிவசப்படும் வைகோ, வார்த் தைகளிலும் நிதானம் இழப்பது தெரிகிறது. கருணாநிதியை சாதிய பின்னணியோடு விமர்சனம் செய்ததும் அடுத்த சில மணி நேரத்தில் ‘இதை என் வாழ்நாளில் செய்த பெரிய தவறாக எண்ணி வருந்துகிறேன்’ என அறிக்கை தந்ததும் இதன் வெளிப்பாடுதான்.
பதற்றத்தின் உச்சத்தில் இருக்கும் வைகோ, ’தேர்தலில் போட்டியில்லை’ என்று அறிவித்ததற்கான உண்மைக் காரணம் தெரியவில்லை. ஆனால், இந்த முடிவு தேர்தல் களத்தில் தனது கூட்டணியை பலவீனப்படுத்தும் என் பதை உணராதவரா வைகோ? உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் தவறான முடிவு களால் தன்னை நம்பி வந்தவர்களின் அரசியல் வாழ்க்கை தரிசாகிக் கொண்டிருக்கிறது என்பதை எப்படி புரிந்து கொள்ளப்போகிறார்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT